Published : 07 Apr 2015 09:48 AM
Last Updated : 07 Apr 2015 09:48 AM
கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபடுவோரையும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்கலாமா என்பது குறித்து மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து வரும் மே மாதத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஒடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பலியானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 18 வயது பூர்த்தியாகாதவர் என்பதால் சிறார் நீதி சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தின்போது அந்த நபருக்கு 18 வயது ஆவதற்கு சில மாதங்கள் மட்டுமே குறைவாக இருந்தது. இதனால் அவரையும் மற்ற குற்றவாளிகளைப் போல கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை தண்டிக்கும் வகையில் சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
அதாவது தீவிர குற்றத்தில் ஈடுபடும் சிறார்களின் வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஹரியாணாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், “கொலை வழக்கு ஒன்றில் எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
ஏனெனில், சம்பவத்தின்போது எனக்கு 18 வயதுக்கும் குறைவாக இருந்த நிலையில், என் மீதான வழக்கை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்காமல் வழக்கமான நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்கி உள்ளனர். இதை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபடுவோரையும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்கலாமா என்பது குறித்து மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு வழக்குகளில், தீவிர குற்ற செயலில் ஈடுபடும் சிறுவர் களுக்கும் சிறார் நீதி சட்டம் பொருந்துமா என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறார் நீதி சட்டத்தை திருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஒரு சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது. 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தீவிர குற்றங்களில் ஈடுபடும்போது அதுதொடர்பான வழக்கை வழக்கமான நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டுமா அல்லது சிறார் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து சிறார் நீதி வாரியம் முடிவு செய்யும் என அதில் கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT