Published : 24 Apr 2015 09:42 AM
Last Updated : 24 Apr 2015 09:42 AM

திருமலையில் பக்தரின் பையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: கண்காணிப்பு அதிகாரிகள் அதிர்ச்சி

திருப்பதி நடைபாதை வழியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டு கண்காணிப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி நடை வழிப்பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர். இது திவ்ய தரிசனம் என அழைக்கப்படு கிறது.

இந்த வழியாக மலையேறி வரும் பக்தர்களின் வசதிக்காக அலிபிரியில் உள்ள சோதனைச் சாவடி அருகே, பக்தர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டு அங்குள்ள ஒரு மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலைக்கு சென்ற பின்னர், அங்கு ஜி.என்.சி விடுதி அருகே உள்ள உடைமைகள் பாதுகாப்பு மையத்தில், தனது உடைமைகளுக்கான‌ ரசீதை காட்டி அவற்றை சம்மந்தப்பட்ட பக்தர் பெற்றுக் கொள்ளலாம். இதனால் மலையேறி வரும் பக்தர்கள் உடைமைகளை சுமக்காமல் மலையேறலாம்.

இந்நிலையில், நேற்று மதியம் அலிபிரியில் இருந்து சோதனை செய்யப்பட்டு திருமலைக்கு வந்த பக்தரின் உடைமை ஒன்றில் இருந்து 20 துப்பாக்கி தோட்டாக்கள் கீழே விழுந்தன. இவற்றில் 12 தோட்டாக்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவற்றின் மூடிகள் ஆகும். மற்ற 8 தோட்டாக்கள் பயன்படுத்தப் பாடாதவை. இதனை கண்டு அங்கிருந்த பக்தர்களும், கண்காணிப்பு அதிகாரிகளும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அலிபிரி மலை அடிவாரத்தில் சோதனை செய்யப்பட்ட பையில் இருந்து திருமலைக்கு எப்படி தோட்டாக்கள் வந்தன‌ என தேவஸ்தான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பக்தரிடம் ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x