Published : 22 Apr 2015 07:54 AM
Last Updated : 22 Apr 2015 07:54 AM
தமிழக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் தேவையற்ற அவதூறை பரப்பியதால், கடைசி வரை எனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்தியாவில் நீதிபதிகளுக்கே நீதி கிடைப்பதில்லை என கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எல்.மஞ்சுநாத் பேசியுள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி, தலைமை பொறுப்பு நீதிபதி உள்ளிட்ட முக்கிய பொறுப்பு களை வகித்த நீதிபதி கே.எல்.மஞ்சுநாத் நேற்று ஓய்வு பெற்றார். இதையொட்டி நீதிபதிகள், வழக்கறி ஞர்கள் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் மஞ்சுநாத் பேசியதாவது:
நான் நீதிபதியாக பொறுப் பேற்ற நாளில் இருந்து இன்று வரை சட்டத்தையும், நீதியையும் முழுமையாக மதித்து மனசாட்சியுடன் பணியாற்றி யுள்ளேன். ஆனால் என் மீது உள்நோக்கத்துடன் சிலர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவதூறு பரப்பினர். இதை கேரளாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகை செய்தி யாக வெளியிட்டு எனக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல பத்திரிகைகள் என்னைப் பற்றி தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டன.
எனக்கு பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் வெளியான அந்த அவதூறு செய்தியை தமிழக வழக்கறிஞர்கள் சிலர் பூதாகரமாக ஆக்கினர். இந்த விவகாரத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் எனக்கு எதிராக செயல்பட்டனர். இருப் பினும் கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எனக்கு ஆதரவாக இருந்தது. இதனால் எனக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
இதேபோல கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக எனக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அப்போது ஆம் ஆத்மி கட்சியினர் எனக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினர். இதனால் இந்த வாய்ப்பும் பறிபோனது. என்னுடைய நேர்மையை பரிசோதிக்கும் வகையில் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'நான் குற்றமற்றவன்' என நற்சான்றிதழ் அளித்தனர்.
இருப்பினும் சில ஆண்டுகளில் அவ்வப்போது கர்நாடக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தும் என் தகுதிக்கும், அனுபவத்துக்கும் உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவில் மூத்த நீதிபதிகளுக்கு நீதி கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சூழல் மாற வேண்டும்: தலைமை நீதிபதி
விழாவில் கர்நாடக தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா பேசும்போது, சமீபத்திய நீதித்துறையின் போக்கு இருளை நோக்கி அமைந்துள்ளது. நீதிபதி கே.எல். மஞ்சுநாத்தின் பேச்சு நீதித்துறையின் நிதர்சனத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறது. நீதிபதிகளுக்கே நீதி கிடைக்காத சூழல் மாற வேண்டும்.
நீதித் துறையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நீதிபதிகளுக்கு இயற்கையாக நீதி கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். நீதிபதிகளுக்கு இழைக்கப்படும் அநீதி தடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் நீதியே கிடைக்காத நீதித்துறையில் நீதிபதிகள் எதற்காக இணைய வேண்டும்? சமீப காலமாக நிலவும் இந்த சூழலை மாற்ற வேண்டும்” என்றார். தலைமை நீதிபதி வகேலாவின் திடீர் பணியிட மாற்றம் நீதித்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT