Last Updated : 04 Apr, 2015 07:19 PM

 

Published : 04 Apr 2015 07:19 PM
Last Updated : 04 Apr 2015 07:19 PM

உடல்நலக் கேட்டை சித்தரிக்கும் வகையில் பீடி, சிகரெட் பாக்கெட்கள் மீது பெரிய அளவில் எச்சரிக்கை படம்: பிரதமர் நரேந்திர மோடி அவசர உத்தரவு

பீடி, சிகரெட் பாக்கெட்கள் மீது உடல்நலக் கேடு தொடர்பான எச் சரிக்கையை சித்தரிக்கும் படத்தை பெரிய அளவில் வெளியிட பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டுள்ளார்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்கள் மீது இப்போது சிறிய அளவில் வெளி யிடப்படுகிறது. இது இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 85 சதவீத அளவுக்கு பெரிது படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டம் 2003 பற்றி மறு ஆய்வு செய்ய பாஜக எம்.பி. திலிப் காந்தி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “புகைப் பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் நடத்தப் பட்ட எந்த ஆய்விலும் உறுதிப் படுத்தப்படவில்லை. வெளிநாடு களின் அழுத்தத்துக்கு பணிந்து விடக் கூடாது. எனவே உடல் நலக் கேடு தொடர்பான படத்தை பெரிதாக்கும் முடிவை ஒத்தி வைக்கலாம்” என கூறப்பட்டி ருந்தது.

இதையடுத்து, படத்தை பெரிதாக வெளியிட வேண்டும் என்ற உத்தரவு கடந்த 1-ம் தேதி அமல்படுத்தப்படவில்லை.

நிலைக்குழுவின் இந்த பரிந்துரை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புகையிலை பொருட்கள் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே அந்தக் குழு இவ்வாறு அறிக்கை அளித் துள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளனர். குறிப்பாக, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப் பினரும் பாஜக எம்.பி.யுமான எஸ்.சி.குப்தா பீடி தொழிலதிபர் ஆவார். இவர் இதுகுறித்து கூறும்போது, “சிலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் சர்க்கரையை தடை செய்ய வில்லையே” என்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் பாஜக செயற்குழுவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏற்கெனவே திட்ட மிட்டபடி, சிகரெட் பாக்கெட் மீது எச்சரிக்கை படத்தை 85 சதவீத அளவுக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகா தாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அறிவுறுத்தி உள்ள தாக தெரியவந்துள்ளது.

மேலும் மக்கள் நலனுக்கு முரணான கருத்துகளை தெரி வித்த உறுப்பினர்களை குழுவிலி ருந்து நீக்குமாறும் மோடி உத்தர விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புகையிலைத் தொழிலில் தொடர்புடைய தொழிலதிபர்களின் நிர்ப்பந்தத்துக்கு அரசு அடிபணி யாது என்பதை உறுதிப்படுத்து வதற்காகவே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகார வட்டாரத்தில் கூறப்படுகிறது.

எனவே, பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று சிகரெட் பாக்கெட்டில் உடல்நலகேட்டை சித்தரிக்கும் படத்தை பெரிய அளவில் வெளியிடும்படி விரைவில் மத்திய அரசு உத்தர விடும் என்று கூறப்படுகிறது.

பொறுப்புடன் முடிவு

இதுகுறித்து பாஜக செயற் குழுவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறும்போது, “தனிப்பட்ட முறையில் யாரும் எந்தக் கருத் தையும் தெரிவிக்கலாம். ஆனால் அதுகுறித்து அலசி ஆராய்ந்து பொறுப்புடன் மத்திய அரசு முடிவு எடுக்கும். சிகரெட் பாக்கெட் மீது எச்சரிக்கை படம் வெளியிடும் விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா முடிவு செய்வார். இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினர்களை நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்குவது குறித்து எதுவும் கூற முடியாது. அதற்கென சில நடைமுறைகள் உள்ளன. அதன் படி நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x