Published : 25 Apr 2015 03:14 PM
Last Updated : 25 Apr 2015 03:14 PM
பிஹார் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்தனர். பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 117 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிஹார் மாநிலத்தில் கடுமையாக உணரப்பட்டது. அந்த மாநிலத்தில் மோதிஹரி பகுதியில் 4 பேரும் சீதாமாரி பகுதியில் 4 பேரும் தர்பங்கா பகுதியில் 3 பேரும் சாப்ராவில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தர்பங்கா மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வீட்டுச் சுவர் இடிந்ததில் 8 வயது குழந்தை, ஒரு பெண் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் குமார் ரவி தெரிவித்தார். வீடுகள் இடிந்ததில் கவுராபோரம் அடுத்த மந்தாரா கிராமத்தில் ஒரு குழந்தையும் திக்கபத்தி கிராமத்தில் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முங்கர் மாவட்டத்தில் நில நடுக்கத்தால் பீதியடைந்து மாடி களில் இருந்து கீழே குதித்த 11 பேர் காயம் அடைந்திருப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் சுனில் குமார் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக பிஹாரில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
117 பேர் படுகாயம்
பிஹாரில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் 55 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த மாநிலத்தில் நிலநடுக்கத்தால் 22 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிஹார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலநடுக்கத்தால் மொத்தம் 117 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்விநியோகம் பாதிப்பு
இதனிடையே வடக்கு பிஹாரில் மின்சார விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நிலநடுக்க பாதிப்பு பற்றி நேரில் ஆய்வு செய்து சேதத்தை மதிப்பீடு செய்யும்படி ரூடியை மத்திய அரசு பணித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியபோது, பேரிடர் உதவிக் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி தயார் நிலையில் வைத்துள்ளார். நிலநடுக்க நிலைமையை பிரதமர் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார் என்று அவர் தெரிவித்தார். மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பாட்னா திரும்பி யுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் பிரிவைச் சேர்ந்த 5 குழுக்கள் பிஹாரின் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 45 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுபுவால்ஸ தர்பங்கா, முஜாபர்பூர், கோபால்கஞ்ச், கோரக்பூர் ஆகிய இடங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT