Published : 02 Apr 2015 03:53 PM
Last Updated : 02 Apr 2015 03:53 PM
கிரிராஜ் சிங் போன்ற குறுகிய மனப்பான்மையுடவர்களின் பேச்சுக்கு பதிலளிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், கடந்த செவ்வாய்க்கிழமை ஹாஜிப்பூரில் பேசுகையில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நைஜீரிய பெண்ணை திருமணம் செய்திருந்தால், அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றி ருக்குமா? சோனியா காந்தி வெள்ளை நிறத்தவராக இல்லா மல், கருப்பாக இருந்திருந்தால், அவரைத் தலைவராக ஏற்றிருப் பார்களா? காணாமல் போன மலேசிய விமானம் போல், காங் கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்கு போனார் என்பது காங்கிரஸாருக்கே தெரியவில்லை’’ என்று கூறினார்.
இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பற்றி சோனியாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சோனியா, “இதுபோன்ற குறுகிய மனப்பான்மை உடையவர்களின் பேச்சுக்கு பதிலளிப்பதில்லை. ராகுலைப் பொறுத்தவரை அவர் விரைவில் வருவார். விவசாயிகளைச் சந்திப்பார்” என்றார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மற்றும் முதல்வர்கள் பாரபட்சம் காட்டாமல் நிவாரண உதவி அளிக்க வேண்டும் எனவும் சோனியா வேண்டுகோள் விடுத்தார்.
சக அமைச்சர் கண்டனம்
கிரிராஜ் சிங்கின் பேச்சுக்கு சக இணை அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹா நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி) இடம்பெற்றுள்ளது. இக்கட்சி சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக உபேந்திரா பதவி வகிக்கிறார்.
கிரிராஜ் சிங் பேச்சு குறித்து அவர் நேற்று கூறும்போது, ‘‘மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஒருவர், தரக்குறைவாகப் பேசுவது அழகல்ல. கிரிராஜ் சிங்கின் பேச்சு கண்டிக்கத்தக்கது. யாரைப் பற்றியும் இதுபோல் பேசுவதை ஆர்எல்எஸ்பி கட்சி ஏற்றுக் கொள்ளாது’’ என்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிரிராஜ் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு உபேந்திரா பதில் அளிக்கையில், ‘‘இது பற்றி கருத்து சொல்ல இயலாது. இந்தப் பிரச்சினையில் பாஜகதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிராஜ் சிங்கின் பேச்சால், பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது’’ என்று தெரிவித்தார்.
பாஜக விளக்கம்
பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ சோனியா காந்தியின் நிறம் பற்றி பேசியது குறித்து அமைச்சர் கிரிராஜ் சிங் உடனடியாக விளக்கம் அளித்துவிட்டார். எனவே, இந்தப் பிரச்சினை முடிந்து விட்டது’’ என்றார்.
சோனியா, ராகுல் பற்றி பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து கிரிராஜ் கடந்த புதன்கிழமை தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், ‘‘அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறைய விஷயங்களை எல்லோரும் பேசுவது வழக்கம். அப்படித்தான் நான் அதிகாரப்பூர்வமற்ற வகையில் (ஆப் தி ரெக்கார்ட்) சில கருத்துகளை கூறினேன். அதை அப்படியே வெளியிட்டு விட்டனர். நான் கூறிய கருத்துகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தியின் மனம் புண்படும்படி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT