Published : 14 Mar 2014 09:41 AM
Last Updated : 14 Mar 2014 09:41 AM
மக்களவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தரப்பில் செய்யப்படும் செலவுகளை கண்காணிக்கும் பணியில் 700 இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தகுதி வாய்ந்த அதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து அனுப்பி வைக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் உற்பத்தி வரி மற்றும் இறக்குமதி வரி மத்திய வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது செலவுகள் அதிகம் செய்யப்படும் தொகுதிகள் என கருதப்படும் இடங்களில் கண்காணிப்பாளர்களாக இந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
இவர்களின் பணி மற்றும் அதிகாரம் என்ன என்பது பற்றி டெல்லியில் இந்த வாரத்தில் இவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது.
இவர்கள் மக்களவைத் தொகுதிகளிலும் ஆந்திரம், அருணாசலப் பிரசேதம், சிக்கிம், ஒடிஸா சட்டப் பேரவைத் தேர்தலிலும் செலவு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் ஆணையம் நியமிக்கும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் பின்பற்றும் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை செலவு கண்காணி்ப்பாளர்கள் மேற்பார்வையிடுவார்கள்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை ஈர்ப்பது மற்றும் பணத்தாசை காட்டுவது போன்ற முறையற்ற செயல்களை கட்டுப்படுத்திடும் நோக்கில் பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
ஏப்ரல் 7-ம் தேதி தேர்தல் ஆரம்பிக்க உள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் இந்திய வருவாய்ப்பணி அதிகாரிகளுக்கான தொகுதிகளை தேர்தல் ஆணையம் ஒதுக்க உள்ளது. மேலும் தமக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளுக்கு பார்வையாளர்களும் செல்ல உளளனர்.
வருமான வரித்துறை தமது பல்வேறு துறைகளிலிருந்து தேர்தல் பணிக்கு அனுப்பி வைப்பதற்கான அதிகாரிகள் பட்டியலை தொகுத்து வைத்துள்ளது. அதே போல இறக்குமதி வரித்துறையும் இந்த பணிக்காக மூத்த அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறது.
இந்த அதிகாரிகள் மே 16-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகும் அடுத்த சில நாள்களுக்கு தேர்தல் ஆணையத்துடனே இணைந்து பணியாற்றுவார்கள் என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT