Last Updated : 01 Apr, 2015 08:31 AM

 

Published : 01 Apr 2015 08:31 AM
Last Updated : 01 Apr 2015 08:31 AM

தொலைபேசியில் லஞ்சப் புகார் வசதி: மீண்டும் அறிமுகப்படுத்துகிறது டெல்லி அரசு

டெல்லியில் தொலைபேசி வாயிலாக லஞ்சப் புகார் அளிக்கும் வசதியை அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.

லஞ்சம், ஊழலுக்கு எதிராக உருவான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் கடந்தமுறை 49 நாட்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அதுபற்றி தொலைபேசியில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் கேஜ்ரிவால் ராஜினாமாவுக்குப் பிறகு இதன் பயன்பாட்டில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் தற்போது தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சிக்கு வந்துள்ள அர்விந்த் கேஜ்ரிவால், அந்த வசதியை மீண்டும் முழு அளவில் அறிமுகப்படுத்த உள்ளார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த வசதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

இது குறித்து டெல்லி அரசு அதிகாரிகள் `தி இந்து’விடம் கூறும்போது, “இந்த வசதி அறிமுக விழாவை டெல்லியின் தால்கட்டோரா அரங்கில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த வசதி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டெல்லி அரசு ரூ. 7 கோடி ஒதுக்க உள்ளது” என்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் விவகாரத்தால் தலைமைக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் வகையில், இந்த விழாவில் தொண்டர்களை திரளாக பங்கேற்கச் செய்யவும் கட்சி திட்டமிட்டு வருகிறது.

லஞ்சப் புகார் வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பாணியில் எப்.எம். ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் கேஜ்ரிவால் பேசவிருக்கிறார்.

இந்த வசதி தொடர்பாக மெட்ரோ ரயில், பேருந்துகள், பொது இடங்கள் என டெல்லி முழுவதும் விளம்பரம் செய்யப்பட உள்ளது.

கேஜ்ரிவாலின் கடந்த ஆட்சியில் லஞ்சப் புகாருக்காக 011-27357169 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அவரது 49 நாள் ஆட்சியில் 1.2 லட்சம் புகார்கள் பதிவாகி இருந்தன. இவற்றில் சுமார் 4,000 புகார்கள் மட்டுமே நேரடி லஞ்சப் புகாராக இருந்தது. இதிலும் 300 புகார்கள் மட்டுமே தக்க ஆதாரங்களுடன் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x