Published : 07 Apr 2015 08:45 PM
Last Updated : 07 Apr 2015 08:45 PM
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் தொலைபேசியில் லஞ்ச ஒழிப்பு புகார் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்தில் 12,731 பேர் மீது புகார்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்ட போது முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் 49 நாள் ஆட்சியில் மொத்தம் 14,000 நேரடிப் புகார்கள் பதிவாகி இருந்தன.
லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக துவக்கப்பட்ட அரசியல் கட்சியான ஆம் ஆத்மியின் ஆட்சி கடந்தமுறை டெல்லியில் 49 நாள் இருந்தது. அப்போதும் முதல் அமைச்சராக இருந்த கேஜ்ரிவால், அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் குறித்து உடனடியாக தொலைபேசியில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார். இது கேஜ்ரிவாலின் ராஜினாமாவிற்கு பின் தொய்வு நிலை அடைந்தது. இதனால், மீண்டும் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த அர்விந்த் கேஜ்ரிவால், அந்தப் புகார் வசதியை நேற்று முன் தினம் மீண்டும் துவக்கி வைத்தார். புகார் எண் 1031-ல் 24 மணி நேரமும் செயல்படும் இந்த வசதிக்கு டெல்லிவாசிகள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏழு மணி நேரத்தில் 3.900 புகார்கள்
இந்த வசதி துவக்கி வைத்த முதல் ஏழு மணி நேரத்தில் 3,900 புகார்கள் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 53 புகார்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது. இந்த புகார்களில் அதிகமாக டெல்லி போலீஸார், கல்வித்துறை, தீயணைப்புப் படையினர், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், போக்குவரத்துத்துறை மற்றும் குடிநீர் வாரியம் ஆகியற்றின்
மீதானவையாக உள்ளன. இதுபோல், தொலைபேசியில் புகார்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படுவதுடன் அவை, உடனடியாக டெல்லியின் லஞ்சஒழிப்பு் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த புகார்கள் மீதான ஆதாரங்களின்படி தரம் பிரிக்கப்பட்டு அவை பொதுமக்களின் பார்வைகளுக்கும் டெல்லி அரசின் இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது.
முதல் நாளில் விசாரணை துவக்கம்
முதல் நாளின் முக்கியமான புகார்கள் மீது டெல்லியின் லஞ்சஒழிப்பு பிரிவினர் தனது விசாரணையையும் அதே நாளில் துவக்கி விட்டனர். இந்தப் புகார்களில் முக்கியமானவை மற்றும் முக்கியம் இல்லாதவை என தரம் பிரிக்கப்பட்டு அவற்றின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் ஆதாரங்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட புகாரை அளித்தவர்களிடம் லஞ்சஒழிப்பு பிரிவினர் பெற்று விசாரணை செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு மீதான விளம்பரம்
தாம் பதவி ஏற்ற 50 ஆவது நாளில் துவக்கப்பட்ட இந்த வசதி குறித்த விழிப்புணர்விற்காக நரேந்தர மோடி பாணியில் எப்.எம். ரேடியோ, தொலைக்காட்சிகளில் கேஜ்ரிவாலும் பேச இருக்கிறார். தமது பதவி ஏற்பின் போது உலகிலேயே லஞ்சம் இல்லாத முதல் மாநிலமாக வரும் ஐந்து வருடங்களில் மாற்றிக் காட்ட இருப்பதாக அறிவிப்பு அளித்திருந்தார். எனவே, அதன் மீதான விளம்பரத் பதாகைகளை டெல்லி முழுவதும் உள்ள பொது இடம், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்காக, டெல்லி அரசு சில கோடிகளை ஒதுக்கி உள்ளது.
கடந்த முறை புகார்கள்
கடந்த முறை இருந்த கேஜ்ரிவாலின் ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு புகாருக்காக 011-27357169 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவரது 49 நாட்களில் 1.2 லட்சம் புகார்கள் பதிவாகி இருந்தன. இதில் சுமார் 4000 மட்டுமே நேரடியாக லஞ்சப் புகாராகவும் அதில், 300 மட்டுமே தக்க ஆதாரங்களுடன் இருந்தன. அதில் பணியாற்றி வந்த 20 ஆய்வாளர்கள் தலைமையிலான குழுக்கள் இந்தமுறை 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதியான ரூபாய் எட்டு லட்சமும், 15 ஆக உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT