Published : 14 Apr 2015 09:47 AM
Last Updated : 14 Apr 2015 09:47 AM
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஒருநாள் போராட்டம் நடத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தன்னுடைய கிராமமான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிறை நிரப்புதல், பேரணிகள், உண்ணாவிரதப் போராட்டங்கள் எனப் பல வகைகளில் இந்த ஒரு நாள் போராட்டம் நடைபெறும். நாடு முழுவதும் ஒரே சமயத்தில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும். அவசரச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அது தவறு. வெறும் வார்த் தைகளை மட்டுமே அது மாற்றியுள்ளது. மற்றபடி, முன்பு இருந்தது போலவே அந்தச் சட்டம் இருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை நான் பேரணிகள் மேற்கொள்வதைத் தொடர்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிரா முதல் டெல்லி வரை ஏற்கெனவே மூன்று மாத நடைப்பயண போராட்டம் ஒன்றை ஹசாரே அறிவித்திருந்தார். ஆனால் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பருவம் தப்பிய மழை காரணமாக, தங்களால் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்க இயலாது என்று விவசாயிகள் பலர் ஹசாரேவிடம் கூறியதால், தற்சமயம் அந்த நடைப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT