Last Updated : 06 Apr, 2015 12:30 PM

 

Published : 06 Apr 2015 12:30 PM
Last Updated : 06 Apr 2015 12:30 PM

இயற்கையை பேணுவதில் இந்தியாவை யாரும் கேள்வி கேட்க முடியாது: பிரதமர் மோடி

இயற்கையைப் பேணும் விஷயத்தில் இந்தியாவை யாரும் கேள்வி கேட்க முடியாது. பருவநிலை மாறுபாடு தொடர்பாக இந்தியாவுக்கு அறிவுரை வழங்கும் உலக நாடுகள் அணுசக்திக்கான எரிபொருளை வழங்க மறுத்து இரட்டை வேடம் போடுகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் இரண்டு நாள் கருத்தரங்கை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தை அளவிடும் தேசிய காற்றுத் தரக் குறியீடு (ஏ.க்யூ.ஐ) திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்தியாவில் தலைநகர் டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் காற்று மிக மோசமாக மாசடைந்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் விமர்சனம் செய்துவருகின்றன. இதன்பின்னணியில்தான் தேசிய காற்றுத் தரக் குறியீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, வாரணாசி, ஃபரிதாபாத், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இக்கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:

சில உலக நாடுகள் பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பெரிய அளவில் அறிவுரை வழங்குகின்றன. அணு சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை சிறப்பாகப் பேணலாம். ஆனால், இயற்கையை இந்தியா சரிவர பேணுவதில்லை என விமர்சிக்கும் வளர்ந்த நாடுகள், அணுசக்திக்கான எரிபொருளை வழங்க மறுத்து இரட்டை வேடம் போடுகின்றன. எவ்வளவு பெரிய முரண்பாடு இது.

இந்தியாவுக்கு அணு எரிபொரு ளைத் தருவதற்கான கட்டுப்பாடு களை உலக நாடுகள் தளர்த்த வேண்டும். அதன்மூலம் இந்தியா பெரிய அளவில் அணு மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

பருவநிலை மாறுபாடுகள், சுற்றுச்சூழல் தொடர்பாக உலகமே கவலை கொள்கிறது. இந்தியாவுக்கு இதுதொடர்பாக எவ்விதக் கவலையும் இல்லை என்ற தவறான தகவல் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், நாம் இயற்கையைக் கடவுளாக நேசிக்கும் கலாச்சாரத்திலும், இயற்கைப் பாதுகாப்பு என்பது மனிதநேயத்துடனும் தொடர்பு கொண்ட கலாச்சாரத்திலும் வளர்ந்திருக்கிறோம்.

நூற்றாண்டுகளாக நாம் மற்றவர்களால் ஆட்சி செய்யப்பட்டதாலோ என்னவோ, நமது கருத்துகளைத் தெரிவிக்க இயலாதவர்களாக அடக்கப்பட்டிருக்கிறோம். நமக்கான தன்னம்பிக்கையை பெறாத வரை இப்பிரச்சினைக்கு நம்மால் தீர்வு காண முடியாது.

பருவநிலை மாறுபாட்டுக்கு எதிரான போரில் உலகத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும். மற்ற நாடுகளையும் அவர்களின் வழிமுறையையும் இந்தியா பின்பற்றாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை உலகுக்கு இந்தியா தெரியப்படுத்தும்.

வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று எதிரானவை எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறான கற்பிதம்.

இந்தியர்கள் இயற்கையை பாதுகாப்பவர்கள், வழிபடுபவர்கள். இக்கருத்தை நாம் முன்னிறுத்த வேண்டும். அப்போதுதான் இவ்விஷயத்தில் இந்தியாவை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதை உலகம் புரிந்து கொள்ளும்.

இந்தியா எப்போதுமே இயற்கையைப் பாதுகாத்து வந்திருக்கிறது. தற்போது கூட இந்தியா மிகக் குறைந்த அளவு கார்பனையே வெளியேற்றி வருகிறது. மறுசுழற்சியும், மறு பயன்பாடும் இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. இந்தியக் கலாச்சாரத்தில் அவை பின்னிப் பிணைந்துள்ளன. வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

2,500 கி.மீ நீளமுடைய கங்கை மாசடைவதைத் தடுப்பதன் மூலம் இதர மாசுபாடுகளையும் தவிர்க்க முடியும் என்பதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நமது பாரம்பரிய வாழ்வியல் முறையைத் திரும்பிப் பார்த்தால் சுற்றுச்சூழலைப் பேண நிறைய வழிகள் கிடைக்கும்.

முழு நிலவு காலங்களில் மின் விளக்குகளை அணைத்து வைப்பதன் மூலமும், வார இறுதி நாட்களில் சைக்கிள்களைப் பயன்படுத்துவதன் மூலமும் எரிசக்தியை மிச்சப்படுத்த முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x