Published : 16 Apr 2015 12:10 PM
Last Updated : 16 Apr 2015 12:10 PM
அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகி 56 நாட்கள் விடுப்பில் இருந்த ராகுல் காந்தி நேற்று நாடு திரும்பினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பே 20-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி , திடீரென விடுமுறையில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தகவல் சொல்லவில்லை. ஆனால், ஓய்வெடுக்க சென்றுள்ளார். விரைவில் திரும்புவார் என்று மட்டும் கூறியது. ஆனால் பல நாட்கள் ஆகியும் ராகுல் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
இதையடுத்து, உத்தரப் பிரதேசம் உட்பட வட மாநிலங் களில், ‘ராகுல் காணவில்லை’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர்களும் பல கேள்விகள் எழுப்பினர். எனினும் காங்கிரஸ் மவுனமாக இருந்தது. இந்நிலையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று காலை 11.15 மணிக்கு டெல்லி வந்தார் ராகுல் காந்தி. விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் உட்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்கு ராகுல் சென்றார். அங்கு சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ராகுலை வரவேற்றனர்.
பின்னர் மூவரும் சிறிது நேரம் தனியாகப் பேசினர். பாங்காக்கில் இருந்து திரும்பிய பிறகு நேற்று ராகுல் காந்தி யாரையும் சந்திக்கவில்லை. தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல் இல்லத்தின் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதற்கிடையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் இந்த பேரணியை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்துவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை ராகுல் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
கட்சித் தலைவராகிறார்?
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த கட்சி தலைவர் பதவி ராகுல் காந்திக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள் அமரிந்தர் சிங், ஷீலா தீட்ஷித் உட்பட சிலர், கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் சரியானவர் அல்ல. சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கூறும்போது, ‘‘இப்போது ராகுல் திரும்பி வந்து விட்டார். இனி முழு வீச்சில் அவர் துடிப்புடன் செயல்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்தார்.
வாழ்த்துகள் பாஜக கிண்டல்
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:
ராகுல் திரும்பி வந்ததற்காக வாழ்த்துகள். ராகுல் குழப்பத் தில் உள்ளார். வாழ்க்கையில் தான் என்னவாகப்போகிறோம், என்னவாக விரும்புகிறோம் என அவருக்குத் தெரியவில்லை. அரசியலைத் தொடர்வாரா என்பதும் தெரியவில்லை.
காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளது. ராகுலை என்ன செய் வது என அதற்குத் தெரிய வில்லை. அவரை முன்னிறுத்து வதா அல்லது ஓரம்கட்டுவதா என கட்சிக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “காணாமல் போவது மற்றும் மீண்டும் வருவது ஆகியவற்றுக்காக செய்திகளில் ராகுல் இடம்பிடிப்பது என்பது காங்கிரஸுக்கு கவலையளிக்கும் விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT