Published : 09 Apr 2015 07:29 PM
Last Updated : 09 Apr 2015 07:29 PM
ஞானபீட பரிசு வென்ற தமிழ் படைப்பாளி ஜெயகாந்தன் மறைவுக்கு பலரும் புகழாஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் பதிவிட்டுள்ளது: “நம்மிடையே வாழ்ந்த படைப்பு மேதை திரு.ஜெயகாந்தன் அவர்களின் துன்பகரமான மறைவினால் தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த ஒரு படைப்பு மேதையை நாம் இழந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81.
ஜெயகாந்தன் 1934-ம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் விழுப்புரத்தில் அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அங்கு அவருக்கு பொதுவுடைமைக் கோட்பாடுகளும் பாரதியாரின் எழுத்துகளுக்கும் அறிமுகமாயின. பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
அங்கு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி அச்சகத்தில் பணிபுரிந்தா. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது தஞ்சையில் கடை ஒன்றில் பணிபுரிந்தார். அப்போது முதல் ஏராளமான படைப்புகளை உருவாகினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கிய அவர் தீவிர எழுத்துப்பணியில் ஈடுபட்டார். 1950-ல் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. தொடர்ந்து சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின. இவரது படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். சில படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT