Last Updated : 07 Apr, 2015 05:40 PM

 

Published : 07 Apr 2015 05:40 PM
Last Updated : 07 Apr 2015 05:40 PM

தீப்பெட்டியோடுதான் விமானத்தில் செல்கிறேன்: விமான போக்குவரத்து அமைச்சர் பேச்சால் சர்ச்சை

விமானத்தில் செல்லும்போது தீப்பெட்டியுடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தன்னை யாரும் தடுத்ததில்லை என்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் விமான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி கேள்விகளை எழுப்பினர்.

அப்போது விமானத்தினுள் தீப்பெட்டி போன்ற பொருட்களை எடுத்து வர அனுமதிக்கலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அந்த துறையின் அமைச்சரான அசோக் கஜபதி ராஜூ, "எனக்கு புகைப்பழக்கம் உள்ளதால் நான் எங்கு சென்றாலும் தீப்பெட்டி அல்லது லைட்டருடன் தான் செல்வேன்.

ஆனால் விமானத்தில் ஏறும்போது, அவற்றை பறிமுதல் செய்துவிடுவார்கள். கடந்த ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்றது முதல் என்னை அதிகாரிகள் லைட்டர் அல்லது தீப்பெட்டியுடன் சென்றாலும் அனுமதிக்கின்றனர். இப்போது கூட எனது பையில் லைட்டர் இருக்கிறது.

இங்கிருக்கும் நிருபர்கள் எனது பேச்சை இப்போது பிரச்சினையாக்க நினைப்பார்கள். ஆனால் நான் கூற வருவது என்னவென்றால், பாதுகாப்பு அம்சங்கள் அர்த்தமற்றதாக இருக்கக் கூடாது.

உலகளவில் எங்கும் தீப்பெட்டியை உபயோகித்ததால் விபத்தும் ஏற்பட்டதாக தெரியவில்லை" என்றார்.

விமான பயணத்தில் எரிவூட்டும் பொருட்களான தீப்பெட்டி, லைட்டர்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த கருத்து அங்கிருந்தவரை அதிருப்தியடைய செய்தது.

விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் ராஜூ தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x