Published : 08 Apr 2015 04:38 PM
Last Updated : 08 Apr 2015 04:38 PM

ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்

ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வீடு வாங்குவோர் இந்த மசோதா தொடர்வாக தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் வருமாறு:

1. இந்த மசோதாவின்படி, அனைத்து கட்டுமானத் திட்டங்களும் அந்தந்த மாநிலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் முறையாக பதிவு செய்யப்படுதல் அவசியம். அதாவது பிளாட்டுகள், குடியிருப்புகள், கட்டடங்கள் என்று விற்க வரும் ஏஜெண்டுகளும் ஆணையத்திடம் முறையாக பதிவு செய்தல் அவசியம்.

2. பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு கட்டுமானத் திட்டங்களாக இருந்தாலும் கட்டிட புரோமோட்டர்கள், கட்டிட வரைபடத் திட்டம், நில தகுதி, கட்டிடம் கட்டப்படும் கால நேர அட்டவணை, பலதரப்பட்ட அனுமதிகள் பற்றிய நிலவரங்கள் என்று அனைத்து தகவல்களும் கட்டாயமாக வெளிப்படையாக தெரியப்படுத்தப்படுவது அவசியம்.

3.கட்டுமான நிறுவனத்திற்கும், வாங்குவோருக்கும் இடையே ஒப்பந்த நடைமுறையை அமல்படுத்துவது அவசியம். மேலும் தகராறுகள் எழுந்தால் விரைவாக அதன் மீது தீர்ப்புகளை அளிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்துள்ளது.

4. வாங்குவோரின் முதலீட்டுத் தொகையில் 50% தொகை 3-ம் நபர் கணக்கில் வைக்கப்படுதல் அவசியம். இந்தத் தொகை அந்தக் குறிப்பிட்டத் திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது தற்காலிக கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

5. கட்டுமானத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென்றால் வாங்குவோரில் 2/3 பேர் அந்த மாற்றத்துக்கு ஒப்புக் கொண்டாலே தவிர கட்டுமான நிறுவனம் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியாது.

இந்த மசோதா, ரியல் எஸ்டேட் மோசடிகள் மற்றும் கால தாமதம் ஆகியவற்றை பெருமளவு தடுக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

வாங்குவோர் முதலீடு செய்யும் தொகையில் 50% தொகை 3-ம் நபர் கணக்கில் வைக்கப்படுதல் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலக்கட்டத்தில் கொண்டு வரப்பட்ட போது 70% ஆக இருந்தது. தற்போது வீட்டு வசதித் துறை அமைச்சகம் இதனை 50% ஆக குறைத்துள்ளது. காரணம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 70% தொகைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x