Published : 21 Apr 2015 08:00 AM
Last Updated : 21 Apr 2015 08:00 AM

65-வது பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் வாழ்த்து

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடுவின் 65-வது பிறந்தநாளை மாநிலம் முழு வதும் உள்ள அவரது கட்சி தொண்டர்களும் ஆதரவாளர் களும் வெகு விமரிசையாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, ஆந்திரா மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஹைதராபாத் தில் உள்ள கட்சி அலுவலகமான என்.டி.ஆர். பவனில் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக அவர் அங்குள்ள என்.டி.ராமாராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பார் வையில்லா இளைஞர்களுக்கு ப்ரெய்லி லேப்-டாப்களை வழங்கிய சந்திரபாபு நாயுடு, ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை திறந்து வைத்தார்.

மேலும் தனது புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்த சந்திரபாபு நாயுடு, அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியிலும் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவர் பேசியதாவது:

தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநில மக்களும் எந்தப் பிரச்சினையுமின்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். தெலுங்கு மக்களின் நலனுக்காக கடைசி வரை போராடுவேன்.

அனந்தபூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பதுடன், அனைத்து அரசு நலத் திட்டங்களும் மக்களுக்கு சேர வழி வகை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

பேரனுக்கு குண்டு துளைக்காத கார் பரிசு

பிறந்து ஒரு மாதமே ஆன தனது பேரனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டு துளைக்காத காரை பரிசாக அளித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ்- பாலகிருஷ்ணாவின் மகள் பிராம்மனி தம்பதிக்கு கடந்த மாதம் தெலுங்கு வருடப்பிறப்பன்று ஆண் குழந்தை பிறந்தது.

இவனுக்கு 4 போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனிடையே சீன சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஆந்திரம் திரும்பிய முதல்வர் நாயுடு, தான் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத காரை பேரனுக்கு பரிசாக வழங்கினார்.

பேரனை வெளியில் அழைத்துச் செல்ல இந்தக் காரைதான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு நக்ஸலைட்டுகள் மூலம் ஆபத்து உள்ளதால், அவருக்கு புதிய குண்டுதுளைக்காத கார் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x