Published : 09 Apr 2015 10:42 AM
Last Updated : 09 Apr 2015 10:42 AM

வீரப்பனிடம் வேலை செய்தவர்கள்: ஆந்திர வனத் துறை மூத்த அதிகாரிகள் தகவல்

ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள வர்கள், சந்தன மர கடத்தல் வீரப்பனிடம் முன்பு வேலை செய்தவர்களாக இருக்கலாம் என்று ஆந்திர வனத் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழி லாளர்கள் 20 பேர் அம்மாநில போலீ ஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

அதேநேரம், இந்த சம்பவத் தின் மூலம் செம்மரங்கள் வெட்டப் படுவதையும் கடத்து வதையும் தடுத்து நிறுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

மதிப்பு மிக்க செம்மரங்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் மிகப்பெரிய அளவில் தொடர்புகளைக் கொண்டுள் ளனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள், தமிழக மற்றும் கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீரப்பனிடம் முன்பு வேலை செய்தவர்கள் ஆவர்.

வீரப்பன் தமிழக அதிரடிப்படை யினரால் கொல்லப்பட்ட பிறகு, அவரிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி செம்மரங்களை வெட்டிக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மரங்களுக்கு சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைப்பதே இதற்குக் காரணம்.

கடத்தல்காரர்களுக்காக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் தமிழக எல்லையோர மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்தொழிலில் கைதேர்ந்த வர்களாக இருந்தபோதிலும், வேறு வேலை தெரியாத கார ணத்தால் பிழைப்புக்காக சட்ட விரோதமான இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

மேலும் செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், மரம் வெட்டும் தொழிலா ளர்களுக்கு தினசரி கூலியாக ரூ.5,000 வழங்குகின்றனர். மேலும் வேலை செய்யும்போது உயிரிழக்க நேரிட்டால் அந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சமும் காயமடைந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்குகின்றனர்.

இந்தத் தொழிலில் இடர் அதிகமாக இருந்தபோதிலும், அதிக கூலி மற்றும் இழப்பீடு கிடைக்கும் என்ற காரணத்தால் சட்டவிரோதமான இந்தத் தொழிலில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

செம்மரங்கள் அதிக அளவில் கிடைக்கும் கடப்பா, ராஜம்பெட்டா, திருப்பதி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவுவதை அவ்வப்போது தடுக்க ஆந்திராவை அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசுகள் தவறிவிட்டன.

இதனால் கடந்த 10 ஆண்டுகளில் கடத்தல்காரர்கள் மிகப்பெரிய தொடர்புகளை உருவாக்கி உள்ளனர். இவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வனம் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த சில ஊழியர்களுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின் றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x