Published : 02 Apr 2015 06:54 PM
Last Updated : 02 Apr 2015 06:54 PM
நாட்டின் உள்கட்டமைப்பு துறைகளுக்கு கடன் அளிப்பதில் வங்கிகள் எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மைக்கு ஏற்பவே உள்கட்டமைப்பு துறைக்கு கடன்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.
நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கு அதிக கடன் தேவைப்படுவதை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பால் விவரித்திருந்தார்.
இந்தச் சூழலில், மத்திய அரசின் எதிர்பார்ப்புக்கு எதிரான கருத்து ஒன்றை, எச்சரிக்கை தொனியுடன் ரகுராம் ராஜன் முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
மத்திய ரிசர்வ் வங்கியின் 80-ம் ஆண்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றதையடுத்து அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“உள்கட்டமைப்புத் துறைக்கு நிறைய நிதி தேவைப்படும் சூழல் உள்ளது. ஆனால் நிறைய வங்கிகள் ஏற்கெனவே நிறைய கடன்கள் வழங்கியுள்ளன. மிகப்பெரிய கார்ப்பரேட் உள்கட்டமைப்பு நிறுவனங்களும் மேலதிகமான கடன்களைப் பெற்றுள்ளன.
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்கட்டமைப்புத் துறைக்கு கடன் வழங்குதல் கூடாது. ஏனெனில் இது நாட்டின் நிதிப்பாதுகாப்பை பொறுத்த விஷயம்” என்றார் ரகுராம் ராஜன்.
டிசம்பர் 2014-ம் ஆண்டின் படி வங்கிகளில் செயலில் இல்லாத சொத்துக்கள் ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. மேலும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக 204 நிலக்கரி நிறுவனங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அந்த நிறுவனங்களுக்கு கடன் அளித்த வங்கிகள் சிக்கலில் உள்ளன.
இந்நிலையில் உள்கட்டமைப்புத் துறை வளர்ச்சிக்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட்டில் ரூ.70,000 கோடி கூடுதல் நிதியாதாரம் வழங்க முன்மொழிந்தார்.
12-வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-17) உள்கட்டமைப்புத் துறையில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு கணிக்கப்பட்டுள்ளது. இதில் 50% தனியார் துறையிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரகுராம் ராஜன் உள்கட்டமைப்பு துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையையும், நாட்டின் நிதிப்பாதுகாப்பையும் சோதிக்கும் கடன் வழங்குதல் கூடாது என்று கூறியுள்ளார்.
“வலுவான தேசிய நிலை ஒழுங்கமைப்புகளை (ஆர்.பி.ஐ. போன்ற) உருவாக்குவது கடினம். எனவே ஏற்கெனவே உள்ள இத்தகைய ஒழுங்கமைப்புகளை வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் ஊட்டி வளர்ப்பது அவசியம். ஏனெனில் இது போன்ற மதிப்பு மிக்க மைய அமைப்புகள் சில மட்டுமே உள்ளன”என்றார் ரகுராம் ராஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT