Published : 20 Apr 2015 09:17 PM
Last Updated : 20 Apr 2015 09:17 PM
சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கில் நேற்றுடன் வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்கு நிறைய அவகாசம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ரவீந்தர் பாட்டீல் சல்மான் கானின் மெய்க்காவலர் ஆவார். சம்பவம் நடந்த தினத்தில் சல்மான் கான் மதுபோதையில் இருந்ததாக அவர் போலீஸாரிடம் புகார் அளித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்து நடந்ததை மறுகட்டமைப்பு செய்த பாந்தரா காவல் நிலைய ஆய்வாளருக்கும், அதனைப் புகைப்படம் எடுத்து செய்தி யாக வெளியிட்ட இரண்டு நாளிதழ் களுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜுஹுவில் உள்ள ஜே.டபிள்யூ மரியட் ஓட்டலில் இருந்து விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதற்கு சல்மான் கானுக்கு 30 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. எனில், அவர் 90 முதல் 100 கிமீ வேகத்தில் தனது காரை ஓட்டியிருக்க வேண்டும் என்று போலீஸார் கூறுகின்றனர். இதனை நிரூபிக்கவே பாந்தரா காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர கனே, நடந்த விபத்தை மறுக்கட்டமைப்பு செய்துகாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ‘விபத்து குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, இவ்வாறு விபத்தை மறுகட்டமைப்பு செய்வது குற்றம்சாட்டப்பட்டவர் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி விடும்' என்று கூறி சல்மானின் வழக்கறிஞர் அந்த ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகாரைத் தொடர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT