Published : 16 Apr 2015 09:02 AM
Last Updated : 16 Apr 2015 09:02 AM
ஆந்திர அரசு கடந்தாண்டு இறுதியில் 3,615 டன் செம்மரங்களை சுமார் 100 கோடி ரூபாய்க்கு முதல்முறையாக சர்வதேச சந்தையில் ஏலம் விட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விரைவில் 3,500 டன் செம்மரங்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், தமிழகம், ஆந்திரம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 50,000 டன் செம்மரங்களை மீட்க அந்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அழிந்து வரும் இனமான செம்மரத்தை வெட்டி விற்க அழிவுநிலை உயிரின வர்த்தகம் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் (Convention on International Trade in Endangered species of wild Fauna and Flora) தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த உடன்படிக்கையை உருவாக்கிய சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும் இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகமும் சில விதிமுறைகளை தளர்த்தியிருக்கின்றன. அதன்படி ஆந்திரா அரசின் ஆறு கிடங்குகளில் இருக்கும் 10,500 டன் (கைப்பற்றப்பட்ட) செம்மரங்களில் 8,584.1363 டன்னை மட்டும் விற்பனை செய்ய அனுமதி கிடைத்தது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆந்திர, தமிழக அரசுகளுக்கு செம்மரத்தின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. கடந்த 2000-களின் தொடக்கத்தில் ஆந்திர, தமிழக அரசுகள் நடத்திய ஏலத்தில் டன்னுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே கிடைத்தது. இதன் பின்பு ஆந்திர அரசு 2006 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் ஏலம் நடத்தியது. இதில் 3,214 டன் செம்மரங்கள் டன்னுக்கு சராசரியாக ரூ.5 லட்சம் வரை ஏலம் போயின. அரசு நடத்திய இந்த ஏலங்களில் பெரும்பாலும் ஆந்திர, தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகளே ஏலம் எடுத்தார்கள்.
இந்த நிலையில்தான் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பு ஏற்றதும் செம்மரக் கடத்தல் தொடர்பாகவும், சர்வதேச சந்தையில் அதன் உண்மையான விலை நிலவரம் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதில் சராசரியாக ஒரு டன் செம்மரத்துக்கு ரூ.25 லட்சம் வரை விலை கிடைப்பது தெரிந்தது. அதுநாள் வரை உள்ளூர் வியாபாரிகள் அரசிடம் மிகக் குறைந்த விலைக்கு செம்மரங்களை வாங்கியும், காடுகளில் வெட்டி கடத்தியும் லாபத்தில் கொழிப்பதை அறிந்த சந்திரபாபு நாயுடு, அதன் பிறகே செம்மரங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தார்.
மேலும் சர்வதேச செம்மர வியாபாரத்தில் ஆந்திர அரசு நேரடியாக ஈடுபடவும் முடிவு செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர வனத்துறை அதிகாரிகள் சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஜியாங்யூ நகரங்களுக்குச் சென்று செம்மரக் கட்டைகளில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த பர்னிச்சர் மற்றும் கலைப் பொருட்களைக் கொண்டு கண் காட்சிகளை நடத்தினர். தொடர்ந்து சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆந்திரா வுக்கு நேரில் வந்து செம்மரக்கட்டை கிடங்குகளைப் பார்வையிட்டனர்.
கடந்தாண்டு இறுதியில் ஆந்திர அரசு முதன்முறையாக செம்மரக் கட்டைகள் விற்பனைக்காக சர்வதேச ஏலத்தை அறிவித்தது. செம்மரங்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ கிரேடு மற்றும் உதிரி கட்டைகள் என்று தரம் பிரிக்கப்பட்டு ஆரம்ப விலையாக டன்னுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதில் ஆந்திர அரசே எதிர்பார்க்காத வகையில் மிக அரிய வகையான ‘ஏ’ கிரேடு செம்மரம் ஒரு டன் ரூ.1.95 கோடிக்கு ஏலம் போனது. மொத்தம் 3,615 டன் செம்மரக் கட்டைகள் ரூ.991.41 கோடிக்கு ஏலம் போயின. அனைத்து வகை கிரேடுகளுக்கும் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.27.41 லட்சம் ரூபாய் கிடைத்தது.
இதற்கிடையே அதிகாரிகள் நடத் திய விசாரணையில் ஆந்திர அரசிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 10,500 டன் னைவிட அதிகமாக சுமார் 50,000 டன் செம்மரங்கள் தமிழகம், ஆந்திரம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநி லங்களில் ரகசியமாக பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. இதைத் தொடர்ந்துதான் ஆந்திர அரசு செம்மரக் கட்டை கடத்தல் காரர்களை ஒடுக்கவும், பதுக்கி வைக் கப்பட்டுள்ள செம்மரங்களை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தப் பின்னணியில்தான் தமிழ கத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப் பட்டதாகக் கூறுகின்றனர் வனத் துறையினர். இதற்கிடையே 2-ம் கட்டமாக 3,500டன் செம்மரங்களை சர்வதேச அளவில் ஏலம் விடப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பு ஏற்றதும் செம்மரக் கடத்தல் தொடர்பாகவும், சர்வதேச சந்தையில் அதன் உண்மையான விலை நிலவரம் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT