Last Updated : 12 Apr, 2015 10:05 AM

 

Published : 12 Apr 2015 10:05 AM
Last Updated : 12 Apr 2015 10:05 AM

ஜனதா பரிவார் கட்சிகள் இணைப்புக்கு பின் ஐக்கிய ஜனதாவை அபகரிக்க அதிருப்தியாளர்கள் திட்டம்: தேர்தல் ஆணையத்துக்கு ஜிதன்ராம் மாஞ்சி கடிதம்

பிஹாரில் நிதிஷ்குமார் தலைமை யில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஜனதா கட்சியி லிருந்து பிரிந்த தலைவர்களான சரத் யாதவ் மற்றும் நிதிஷ்குமாரால் இக்கட்சி உருவாக்கப்பட்டது.

கடந்த மக்களவை தேர்தலில் பிஹாரில் பாஜக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியால், ஐக்கிய ஜனதா தளம் தங்கள் அரசியல் எதிரியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட 5 கட்சிகளுடன் இணைய முடிவு எடுத்தது.

ஜனதா கட்சியிலிருந்து உரு வான 6 கட்சிகளையும் கலைத்து விட்டு, `சமாஜ்வாதி ஜனதா தளம்’ என்ற பெயரில் புதிய கட்சியை உரு வாக்கும் முயற்சியில் இவற்றின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் அதிருப்தியாளர்கள் ஒன்று சேர்ந்து அக்கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை தங்கள் வசமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சார்பில் பிஹாரின் முன் னாள் முதல்வரான ஜிதன்ராம் மாஞ்சி சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மாஞ்சியின் ஆதர வாளரும் பிஹாரின் இஸ்லாம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜீவ் ரஞ்சன் சிங் `தி இந்து’விடம் கூறும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணை யின்படி, கலைக்கப்படவிருக்கும் கட்சியின் ஓர் எம்எல்ஏ அல்லது எம்.பி.க்கு அதில் விருப்பம் இல்லையெனில், அவர் அக்கட்சியின் அடையாளத்தை ஏற்று நடத்தலாம். இதை குறிப்பிட்டு எங்கள் தலைவர் ஜிதன்ராம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்றார்.

பிஹாரில் சபாநாயகரால் பதவி பறிக்கப்பட்ட 4 எம்எல்ஏக்கள் இதற்கு ஆதரவாக உள்ளனர். மாஞ்சியின் ஆதரவாளர்களான இவர்கள், மாநிலங்களவை தேர்தலில் கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதால் பதவி நீக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீக்கப்பட்டது சரி என்று பாட்னா உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகிகள் `தி இந்து’விடம் கூறும்போது, “கட்சியின் பொதுக்குழுவில் அது கலைக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பான தேர்தல் சட்டப் பிரிவுகளை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். இதற்கு முன்னதாக மாஞ்சி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். பிறகு, லாலு மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் தனது ஆட்சியை தொடர்ந்தார்.

மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்விக்கு பொறுப்பேற்ற நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தனது ஆதரவாளர் ஜிதன்ராம் மாஞ்சியை அப்பதவியில் அமர்த்தினார். எனினும் கருத்து வேறுபாட்டால் அவரை பதவியிலிருந்து நீக்கிய நிதிஷ், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.

இதனிடையே ஜக்கிய ஜனதா தளத்தில் தொடர்ந்து நீடிக்கும் மாஞ்சி, அக்கட்சியின் 16 எம்எல்ஏக்கள் உட்பட தனது ஆதரவாளர்களுடன் `இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ எனும் பெயரில் தனி அமைப்பை தொடங்கியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x