Last Updated : 07 Apr, 2015 12:33 PM

 

Published : 07 Apr 2015 12:33 PM
Last Updated : 07 Apr 2015 12:33 PM

பாஜக எம்.பி.க்கள் வாயை சுத்தம் செய்யப்போவது யார்?- சிவசேனா

தூய்மை இந்தியா திட்டத்தில் தெருக்களை சுத்தம் செய்வதுப் போல, சிலரது வாயிலிருந்து வெளியேறும் குப்பை போன்ற பேச்சை யார் வந்து சுத்தம் செய்வார்கள்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கு, ஆதாரம் ஏதுமில்லை என்று நாடாளுமன்றக் குழு தலைவர் திலீப் காந்தி பேசியதற்கு கடந்த சில நாட்களாக கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தப் பிரச்சினை குறித்து பாஜக கருத்து தெரிவிக்காமல் இருப்பதை விமர்சித்து மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி கட்சியான சிவ சேனாதனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டிருக்கிறது.

அதில், "அகமதுநகர் பாஜக எம்.பி. திலீப் காந்தியின் ஆராய்ச்சி முடிவுக்கு நோபல் பரிசு தான் வழங்க வேண்டும். மிக ஆச்சரியமான முடிவை அவர் கண்டுபிடித்துவிட்டார்.

அவர் எப்போது, எங்கே இந்த ஆராய்ச்சி அனைத்தையும் முடித்து இத்தகைய மேன்மையான கண்டுபிடிப்பை கண்டுபிடித்தார் என்று யாரும் கேள்வி எழுப்பக் கூடாது.

அவர் புகையிலை லாபிக்கு ஆதரவாக பேசி, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தன்னால் ஆன முறையில் உன்னதமாக விளம்பரம் செய்துள்ளார். அதனால் தான் குட்கா, பான் மசாலா கம்பெனிகள் இவரது கருத்தை வரவேற்றிருக்கின்றனர்.

மும்பை டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 100 பேர்களில் சுமார் 65 பேர் புகையிலை உபயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் நேரத்தை உழைப்பையும் அளித்து புற்றுநோய்க்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், இங்கு நிலைமை தலை கீழாக இருக்கிறது.

ஒரு பக்கம், புகையிலைக்கு எதிராக பிரதமர் பேசுகிறார். மறுபக்கம், புகையிலையை தயங்காமல் உபயோகிக்க பாஜக எம்.பி பரிந்துரைக்கிறார்.

தெருவில் இருக்கும் குப்பைகளை அகற்ற பிரதமர் தனது கையில் துடைப்பத்தை ஏந்தினார். ஆனால் சிலரது வாயிலிருந்து வரும் அசுத்தமான குப்பை போன்ற பேச்சை யார் வந்து சுத்தம் செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பி அந்த தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x