Published : 11 Apr 2015 08:36 AM
Last Updated : 11 Apr 2015 08:36 AM
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்பு களில் இருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் வரும் 14-ம் தேதி நடத்தவிருக்கும் கூட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இக்கூட்டத்தை முறி யடிக்கும் முயற்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பினர் ஈடுபட்டிருப் பதாக கூறப்படுகிறது.
யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரின் கூட்டத்துக்கு நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து 610, உத்தரப்பிரதேசம் 476, பிஹார் 219, ஹரியாணா 192, மகாராஷ்டிரம் 140, தமிழகம் 45, ஆந்திரம் 140, கர்நாடகம் 200, கேரளம் 125 பேர் உட்பட மொத்தம் 2,500 பேர் பங்கேற்கவுள்ளனர். வெளி நாடு வாழ் இந்தியர்கள் சுமார் நூறு பேர் பங்கேற்கின்றனர்.
ஹரியாணாவின் குர்கானில் நடை பெறவுள்ள இந்தக் கூட்டம் பற்றிய தகவலை யாதவ் மற்றும் பூஷண் ஆதரவாளர்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். ’ஸ்வராஜ் சம்வாத் (சுயராஜ்ஜிய உரையாடல்)’ எனும் பெய ரில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அவசர முடிவு இல்லை
இதற்கான ஆதரவு குறித்து ‘தி இந்து’விடம் யோகேந்திர யாதவ் தரப்பினர் கூறும்போது, ‘கட்சியில் தவறு செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக உருவாக் கப்பட்ட லோக்பாலில் விசாரிக்காமல் பூஷண் மற்றும் யாதவ் நீக்கப்பட்டது மாபெரும் தவறு என கட்சியினர் கருது கின்றனர். இதை விவாதிப்பதற்காக சுயராஜ்ஜிய உரையாடலில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர். அன்றைய தினம், பதிவாகும் கருத்துகளை பரிசீ லித்து பொறுமையாகவே செயல்படு வோம். தவிர, அவசர கோலத்தில் முடிவு எடுக்க வேண்டிய எந்த அவசியமும் தற்போது இல்லை” என்றனர்.
நீக்கப்பட்டவர்கள்
கடந்த மார்ச் 28-ல் டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய செயற்குழுவில் இருந்து பூஷண் மற்றும் யாதவ் நீக்கப் பட்டனர். அவ்விருவருக்கும் ஆதர வாக பேசிய ஆனந்தகுமார் மற்றும் அஜித் ஜாவும் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது, யோகேந்திர யாதவுடன் தர்ணா அமர்ந்த காரணத்துக்காக வட கிழக்கில் ராகேஷ் சின்ஹா மற்றும் பஞ்சாபின் விஷால் சர்மா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி எச்சரிக்கை
ஏப்ரல் 14 கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அக் கட்சியின் சுற்றறிக்கையில், 14-ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான நடவடிக் கையாகக் கருதப்பட்டு அவர்களை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் துடன், அந்தக் கூட்டத்தின் ஏற்பாடு கள் செய்து வரும் முக்கியப் பொறுப் பாளர்களை கண்டுபிடித்து அவர் களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களின் முயற்சியை முறியடிக்க வும் கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வருவாரா மேதா பட்கர்?
எனினும், ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்பையும் மீறி 14-ம் தேதி கூட்டத் தில் கலந்து கொள்வோர் பட்டியல் நீண்டபடி உள்ளது. இதில் முக்கிய மானவர்களாக டெல்லியின் திமர்பூர் தொகுதி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கர், பஞ்சாபின் விஷால் சர்மா மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தமிழகத்தின் கட்சி அமைப்பாளர் கிறிஸ்டினாசாமி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பூஷண் மற்றும் யாதவ் நீக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை விட்டு விலகிய சமூக ஆர்வலரான மேதா பட்கரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT