Published : 04 Apr 2015 12:57 PM
Last Updated : 04 Apr 2015 12:57 PM
உத்தராகண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் சட்டவிரோதமாக, போலி ஐஏஎஸ் அதிகாரி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் முசூரியில் லால் பகதூர் தேசிய நிர்வாக பயிற்சி மையம் (எல்பிஎஸ்என்ஏஏ) செயல்பட்டு வருகிறது. இதில் போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்ததாக ரூபி சவுத்ரி என்ற பெண் மீது, அந்த மையத்தின் நிர்வாக அதிகாரி (பாதுகாவல்) கடந்த 31-ம் தேதி முசூரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டேராடூனில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ரூபியை போலீஸார் நேற்று முன்தினம் சிறை வைத்தனர். அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு அன்று இரவு ரூபியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, ரூபியின் சொந்த ஊரில் உள்ள அவரது தந்தை சத்யவீர் மற்றும் சகோதரர் மொஹித் ஆகியோரிடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதுதொடர்பான அறிக்கையை எல்பிஎஸ்என்ஏஏ நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மாநில காவல் துறை தலைவர் பி.எஸ்.சித்து தெரிவித்துள்ளார்.
அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எல்பிஎஸ்என்ஏஏ நிர்வாகத்துக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ரூபிக்கு போலி அடையாள அட்டை வழங்கியதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரியும் எல்பிஎஸ்என்ஏஏ துணை இயக்குநரு மான சவுரப் ஜெயின் மீது எந்த நேரமும் நடவடிக்கை எடுக்கப் படலாம் என கூறப்படுகிறது.
நூலகத்தில் காலியாக உள்ள ஒரு பதவியில் தன்னை நியமிப் பதற்காக ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் இதற்கு முன்பண மாக ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும் ஜெயின் மீது ரூபி குற்றம் சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT