Published : 04 Apr 2015 08:33 AM
Last Updated : 04 Apr 2015 08:33 AM
நீதித் துறை சீர்திருத்தம் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 24 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்றனர்.
நீதித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது, அதில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, நீதிமன்றங்களில் தேங்கி யுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது மற்றும் நீதித்துறைக்குத் தேவையான உட்கட்டமைப்புகள் குறித்து விவாதித்து முடிவு காண டெல்லியில் 2 நாள் மாநாடு நடக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மூத்த நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், அனில் ஆர்.தவே ஆகியோர் தலைமையிலான மாநாடு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது. இதில் 24 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்றுள்ளனர்.
நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 2.64 கோடி வழக்குகள் முடிவு காணப்படாமல் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 42 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிப்பது, விசாரணையை முடுக்கி விடுவது குறித்து நீதிபதி கள் இந்த மாநாட்டில் முக்கிய மாக ஆலோசனை நடத்து கின்றனர். வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான உட்கட்டமைப்பு களை ஏற்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், புனித வெள்ளியான நேற்று மாநாடு நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தலைமை நீதிபதி தத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘‘புனித வெள்ளியன்று நீதிபதிகள் சிலர், தங்கள் மதரீதியான விஷயங்களில் ஈடுபட்டிருப்பார்கள். முக்கியமான மாநாட்டை அரசு விடுமுறை தினமான புனித வெள்ளியன்று நடத்தக் கூடாது’’ என்று குரியன் கூறியிருந்தார்.
இதற்கு தலைமை நீதிபதி தத்து எழுதிய பதில் கடிதத்தில், ‘‘நீதித்துறையில் உள்ள சிக்கல்களுக்கு உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. தனிப்பட்ட நபர்களின் நலன்களை விட நீதித்துறையின் நலன் மிக முக்கியம்’’ என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி குரியன் ஜோசப், தற்போது கேரள மாநிலம் கொச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை 5-ம் தேதி உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நீதிபதிகள், முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.
நீதித்துறைக்குத் தேவையான வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தித் தர, 14-வது நிதிக் குழு ரூ.9,749 கோடி அனுமதி அளித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களில் உட் கட்டமைப்புகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்று மாநில அரசுகளையும் நிதிக் குழு அறிவுறுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT