Published : 20 May 2014 08:56 AM
Last Updated : 20 May 2014 08:56 AM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அம்மாநில அமைச்சர் சதாய் ராம் யாதவ் (61) மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இம்மாநிலத்தின் ஜான்பூர் அருகே லைன் பஜார் பகுதியில் கல்சாகா என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சதாய் ராம் யாதவ் திங்கள்கிழமை காலை இங்கு ரயில் பாதையை காரில் கடக்க முயன்றார். அப்போது அவரது கார் மீது ஜான்பூர் அவுரிகார் இடையிலான பாசஞ்சர் ரயில் மோதியது. இதில் சதாய் ராம், அவரது பாதுகாவலர் விக்ரம் வர்மா (27), கார் டிரைவர் ரோகித் தீட்சித் (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை தொடர்ந்து சிறிது தூரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. விபத்து பற்றி அறிந்து, அங்கு குவிந்த சமாஜ்வாதி கட்சியினர், ரயில் மீது கல்வீசித் தாக்கினர். அவர்களை ரயில்வே மற்றும் உள்ளூர் போலீஸார் கட்டுப்படுத்தினர். இதையடுத்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஜான்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்கு குவிந்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
‘ரயில் வேகத்தை குறைத்து மதிப்பிடுவதே காரணம்’
ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகள் நடப்பது தமிழகத் துக்கும் புதிதல்ல. 2007-ல் காஞ்சிபுரம் அருகே அகரம் கிராமத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற வேன் மீது செங்கல்பட்டு அரக்கோணம் பயணிகள் ரயில் மோதியது. வேன் நொறுங்கி 9 வி.ஏ.ஓ.க்கள் உள்பட 11 பேர் பலியாயினர். இதற்கு 6 மாதங்களுக்கு முன்பு, அகரம் அருகே புதுப்பாக்கத்தில் ஆட்டோ மீது மின்சார ரயில் மோதியதில் 17 பேர் பலியாயினர்.
பாளையங்கோட்டை அருகே கடந்த சனிக்கிழமை ஆளில்லா கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 3 பெண்கள் பலியாயினர். இதே பகுதி நெடுங்குளத்தில் கடந்த ஆண்டு 2 பைக்குகளில் சென்ற 5 பேர் ரயில் மோதி இறந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் 33 ஆயிரம் லெவல் கிராசிங்குகள் உள்ளன. இதில் 3300 கிராசிங்குகளில் மேம்பாலம், சுரங்கப்பாதை இருக்கிறது. ஆட்கள் இருக்கும் லெவல் கிராசிங் 17,839 மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் 14,896. ஆள் இல்லாதவற்றில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்றால் ஷிப்டுபடி 90 ஆயிரம் பேரை நியமிக்க வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ரூ.2,300 கோடி கூடுதலாக தேவைப்படும்.
110 கி.மீ. வேகத்தில் வரும் ரயில்
500 அடி தொலைவில் வரும் ரயிலைப் பார்த்து, அது வருவதற்குள் கடந்து போய்விடலாம் என்று நினைக்கக் கூடாது. தண்டவாளத்தை மனிதர்கள் கடக்க 5 வினாடிக்கு மேல் ஆகும். 110 கி.மீ. வேகத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்து பலி வாங்கிவிடும். ஆளில்லா லெவல் கிராசிங்கில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ரயில் வந்தால், பொறுமையாக இருந்துவிட்டு, ரயில் போன பிறகு கடந்து செல்வதே சரி.
பஸ், கார் போல ரயிலை நினைத்த மாத்திரத்தில் திடீரென்று நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் தடம் புரளும் அபாயம் உண்டு. அப்படியே பிரேக் பிடித்தாலும் 300 அல்லது 400 மீட்டர் தொலைவு போய்த்தான் நிற்கும்.
தானியங்கி கேட்: அதிக செலவு
சராசரியாக எத்தனை பேர், வாகனங்கள் கடக்கின்றன என்பதை வைத்தே ஆளில்லா லெவல் கிராசிங்கை ஆள் இருக்கும் லெவல் கிராசிங்காக மாற்றுவதா, சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பதா என்று முடிவெடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொலைவில் ரயில் வரும்போது தானாக ரயில்வே கேட் மூடி, திறக்கும் அதிநவீன வசதியை ஏற்படுத்த அதிக செலவாகும்.
இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT