Published : 30 Apr 2015 08:46 AM
Last Updated : 30 Apr 2015 08:46 AM
டெல்லியின் இதயப் பகுதியான கன்னாட் பிளேஸ் பகுதியை பன்னாட்டு சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதியை நிர்வகித்து வரும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில், தினமும் சுமார் 5 லட்சம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக கன்னாட் பிளேஸ் உள்ளது.
துணிமணிகள், எலெக்ரானிக் பொருட்கள் உட்பட பல்வேறு வகை பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. இந்தப் பகுதியின் கடைத்தெருக்கள் மிகவும் பழமையானதும், புகழ் பெற்றதும் ஆகும்.
இதனால், டெல்லிவாசிகள் மற்றும் வெளியூர்வாசிகள் தவறாமல் செல்லும் முக்கிய இடமாக கன்னாட் பிளேஸ் உள்ளது. இங்குள்ள பூங்காவில் கடந்த வருடம் நாட்டின் முதல் பெரிய அளவிலான தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளிடையே பூங்காவின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் அந்தப் பகுதியை பன்னாட்டு சுற்றுலாத் தலமாக்க என்.டி.எம்.சி. முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் என்.டி.எம்.சி.யின் தலைவர் ஜலாஜ் வாத்ஸவா கூறும் போது, “இங்குள்ள மத்திய பூங்கா முழுவதும் அழகுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில், பல வண்ணங்களிலான இசை நீரூற்றுகள், 3 டி ஒளிக்கற்றை காட்சிகள் உட்பட உலகத்தரமிக்க பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பப்படும். பசுமையான செடி, கொடிகள், தடாகங்கள், அரிய ஓவியங்கள் என கண்ணைக்கவரும் பல் வேறு அம்சங்கள் இடம்பெறும். குறிப்பாக இங்கு வரும் மக்க ளுக்கு நவீன தொழில்நுட்பங் களால் ஆன உயரிய பாதுகாப்பும் அளிக்கப்படும்” என்றார்.
கன்னாட் பிளேஸின் கடைத்தெருக்களுக்கு நடுவே அமைந்துள்ள மத்திய பூங்காவானது, சுமார் 39,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 27,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பசுமையான செடி, கொடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இதனால், மாலை நேரங்களில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக பொதுமக்கள் இங்கு அதிகளவில் கூடுகின்றனர். இதில், இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாலீகா பஜார் எனும் வெளிநாட்டு பொருட்களுக்கான சந்தை அமைந்திருப்பதும் முக்கியக் காரணம் ஆகும். கன்னாட் பிளேஸ் பகுதியில் நரேந்திர மோடி அரசு வைஃபை வசதியும் செய்து வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT