Published : 23 Apr 2015 11:53 AM
Last Updated : 23 Apr 2015 11:53 AM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்த போனை மத்தியப் பிரதேச முதல்வரான சிவராஜ்சிங் சவுகான் எடுக்கவில்லை எனப் புகார் கிளம்பி உள்ளது.
இது குறித்து சவுகானுக்கு, கேஜ்ரிவால் கடிதம் எழுதி புகார் கூறியதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.
ம.பி மாநிலத்தின் நர்மதை ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் ஓம்காரேஷ்வர் அணையின் நீர்மட்டம், 189-ல் இருந்து 191 மீட்டருக்கு உயர்த்தப்பட்டது.
இதனால், அணை பாதிக்கப்பட்டதாக, கண்ட்வாவில் உள்ள கோபால்காவ்ன் கிராமத்தின் விவசாயிகள் கடந்த சில நாட்களாக பாதி நீரில் மூழ்கியபடி ‘ஜல சத்தியாகிரகம்’ நடத்தி வருகின்றனர். இதன் மீது, ம.பியை ஆளும் பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அல்லது நஷ்ட ஈடு என எதுவும் அளிக்கப்படவில்லை.
இது குறித்து அம் மாநில முதல்வர் சவுகானுடன் பேச வேண்டி ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் போன் செய்துள்ளார். அந்த அழைப்பை சவுகான் எடுக்கவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது.
இது குறித்து கேஜ்ரிவால், சவுகானுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த சில நாட்களாக தங்களை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். தங்கள் கடுமையான பணியின் காரணமாக என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. மிகவும் வெறுப்பிற்குள்ளான ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச விரும்பினேன். ஓம்காரேஷ்வர் அணையால் பாதிக்கப்பட்டதால் மறுவாழ்வு கேட்டு நர்மதா பள்ளத்தாக்கில் அதன் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துடன் நான் நீண்ட காலமாக இணைந்திருக்கிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேஜ்ரிவாலின் இந்த கடிதத்தால் ம.பி முதல்வர் மிகவும் வருத்தம் அடைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சவுகானின் சார்பில் அவரது செயலாளரும் செய்தித்துறை ஆணையருமான எஸ்.கே.மிஸ்ரா பதிலளித்துள்ளார். அதில் அவர், கடந்த ஒரு வார காலத்தில் முதல்வரின் மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளில் வந்த போன்களை சரி பார்த்து விட்டதாகவும், அவற்றில் டெல்லி முதல்வரிடம் இருந்து எந்த போனும் வந்ததாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். வழக்கமாக தமக்கு வரும் அனைத்து போன்களையும் தவறாமல் எடுத்து பதில் கூறும் வழக்கம் உடையவர் சவுகான் எனவும், கேஜ்ரிவால் தவறானத் தகவல் அளிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
சவுகான் மற்றும் கேஜ்ரிவாலுக்கு இடையே நடந்த தொலைபேசி பிரச்சனையில் அம் மாநிலத்தின் எதிர்கட்சியான காங்கிரஸும் இன்று தலையிட்டு அரசியல் செய்யத் துவங்கி விட்டது. இக் கட்சியின் சார்பில் ம.பி மாநில சட்டப்பேரவை எதிர்கட்சியான தலைவராக இருக்கும் சத்யதேவ் கட்ரே, ‘சவுகான் ஒன்றும் பணிவான விவசாயி அல்ல. அவர் கேஜ்ரிவாலின் தொலைபேசிக்கு பதில் அளிக்காதது ஏன் எனவும், நடந்த உண்மை என்ன என்றும் மபி மக்களிடம் சவுகான் தெளிவுபடுத்த வேண்டும்.’ என வலியுறுத்தி உள்ளார்.
கடந்த செப்டம்பரில் ம.பிவாசிகளுக்காக ‘ஹெல்ப் லைன் எண் 181’ துவக்கப்பட்டது. இதில் பதிவு செய்த குறைகள் தீர்க்கப்பட்டதா என அறிய அதன் முதல்வர் சவுகான் ’ஹலோ! நான் முதல் அமைச்சர் பேசுகிறேன்! நீங்கள் அளித்த புகாரின் குறை தீர்க்கப்பட்டதா?’ என பொதுமக்களிடம் நாள்தோறும் 15 நிமிடங்கள் போன் செய்து பேசுவதாக செய்திகள் வெளியானது நினைவு கூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT