Published : 15 Apr 2015 07:35 AM
Last Updated : 15 Apr 2015 07:35 AM

கட்சித் தலைவராக நியமிக்க எதிர்ப்பு: ராகுலின் திறமை மீது சந்தேகம் - மூத்த தலைவர் ஷீலா தீட்சித் போர்க்கொடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஆளுமைத்திறன் மீது சந்தேகம் எழுகிறது என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை கட்சித் தலைவராக நியமிப்பது பொருத்த மானதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ராகுல் காந்திக்கு கட்சித் தலைவர் பதவி அளிப்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதையே நான் ஆதரிக்கிறேன்.

மக்களிடையே கட்சிக்கு செல் வாக்கை உருவாக்க சோனியா வால் மட்டும்தான் முடியும். அவர் மீது கட்சியினர் முழு நம்பிக்கை வைக்கலாம்.

ஆனால், ராகுல் காந்தியின் தலைமைத் திறனை இதுவரை முழுமையாக சோதித்துப் பார்த்த தில்லை. அவரது ஆளுமைத் திறன் மீது சந்தேகம் எழுகிறது. இப்போதைய நிலையில் சோனியாவே கட்சித் தலைவராக நீடிப்பது கட்சிக்கு நன்மை பயக்கும். அவரின் தலைமையை இதுவரை யாரும் குறை கூறவில்லை.

அதேநேரம் ராகுலின் தலைமைப் பண்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவர் சிறப்பாக செயல்பட்டதாகத் தெரியவில்லை. அவர் மீது அவ நம்பிக்கை உள்ளது. ராகுல் செயல்பாடு குறித்து கட்சியினரிடம் நம்பிக்கை வளர வேண்டும். ஆனால், இப்போதே இவரது தலைமைப் பண்பு குறித்து மதிப்பிடுவது சரியாக இருக்காது.

கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சோனியா காந்திதான் இறுதி முடிவெடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரை சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு ஓடுபவர் அல்ல.

மத்தியில் இரண்டு முறை பிரதமர் பொறுப்பேற்கும் வாய்ப்பு சோனியா காந்திக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவர் நம்பகமான தலைவர். அவரைத்தான் கட்சியினரும் மக்களும் நம்புகின்றனர்.

இப்போதும்கூட விவசாயி களின் நலன் காக்க நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவர் போராடி வருகிறார்.

கட்சியின் காரிய கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும். கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். இளம் தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு அளிப்பது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். பிரியங்கா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக் கிறது. கட்சிக்காக மீண்டும் தீவிர மாகப் பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், நானாக எந்தப் பொறுப்பும் கேட்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலுக்கு அளிப்பதில் ஆரம்பம் முதலே கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தி தலைவர் ஆவதை விரும்பவில்லை என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷீலா தீட்சித்தின் பேட்டி குறித்து கட்சித் தலைமை கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் அவரிடம் விளக்கம் கோரியபோது, எனது பேட்டி திரித்து வெளியிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இன்று டெல்லி திரும்புகிறார் ராகுல்?

ராகுல் காந்தி கட்சிப் பணிகளில் இருந்து விலகி விடுப்பில் சென்றிருப்பதாக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி காங்கிரஸ் தலைமை அறிவித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் 55 நாட்களுக்கு பிறகு வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் அவர் பங்கேற்பார் என்று கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ராகுல் வெளிநாட்டில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. இன்று அவர் டெல்லி திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x