Last Updated : 21 Apr, 2015 08:24 PM

 

Published : 21 Apr 2015 08:24 PM
Last Updated : 21 Apr 2015 08:24 PM

கருப்புப் பண விசாரணை நிலவரம் என்ன? மே 12-ல் அறிக்கை தாக்கல் செய்யக் கோரும் உச்ச நீதிமன்றம்

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவகாரத்தில் விசாரணையின் நிலவரம் என்ன என்பதை மே 12-ம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எச்.எல்.தத்து, மதன் பி.லொகூர் மற்றும் ஏ.கே.சிக்ரி தலைமையிலான் அமர்வு மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜியிடம், சிறப்பு விசாரணைக் குழுவின் புதிய அறிக்கையை மே மாதம் 12-ம் தேதி சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளும்படியாக அறிவுறுத்தியது.

எனவே கோடைவிடுமுறைக்கு முன்னதாக கருப்புப் பண விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தங்களால் பார்வையிட முடியும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி 20-ம் தேதி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியிடம் ஆலோசனைகளைப் பெறுமாறு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆலோசனைகளை சட்டத்துக்குட்பட்டு பரிசீலனை செய்து சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தயார் செய்து அதன் நகலை சீலிட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவும் கூறியது.

இந்த அறிக்கையை படித்துப் பார்த்த பிறகே அதனை ஜேத்மலானியிடம் கொடுப்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜேத்மலானியின் பிரதிநிதியாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கூறும் போது, “(கருப்புப் பண விவகாரத்தில்) தீர்ப்பை வெறுப்பேற்றுவதற்காக தீர்மானகரமான முயற்சி இருந்து வருகிறது” என்றார்.

இதனை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் ஜேத்மலானிக்காக ஆஜரான வழக்கறிஞரிடம், “இந்த விஷயத்தில் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்” என்றனர்.

கடந்த முறை விசாரணையின் போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதில்தான் ஆர்வம் இருக்கிறது என்றும், சட்ட விரோத கணக்காளர்களின் பெயர்களில் அல்ல என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கூறும் போது, “நாட்டுக்கு இன்னமும் ஒரு ரூபாய் கூட வரவில்லை. கடந்த 6 மாதங்களாக சோதனைகள், மற்றும் சிலரது சொத்துக்கள் முடக்கம் மட்டுமே நடைபெற்றுள்ளது” என்றார்.

மேலும், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை கோர்ட்டுக்கு தெரிவிக்க அனில் திவானுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். கருப்புப் பண விவகாரத்தில் பிரான்ஸ் அரசுடனான கடிதப் போக்குவரத்து குறித்த ஆவணங்களை மத்திய அரசு பகிர்ந்து கொள்ளாததற்கான காரணங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று அனில் திவான் தெரிவிக்கவே இந்த 3 வாரங்கள் அவகாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x