Published : 21 Apr 2015 07:58 AM
Last Updated : 21 Apr 2015 07:58 AM
முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான, அதி நவீன `ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க்கப்பல் தேசத்துக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது. இக்கப்ப லின் வருகை இந்திய கடற்படையின் பலத்தை அதிகரித்துள்ளது.
ராடார், சோனார், அகச்சிவப்புக் கதிர்கள் என எந்தவொரு தொழில் நுட்பத்தாலும் எளிதில் கண்டுபிடிக்க இயலாத கப்பல்கள் ஸ்டீல்த் வகைக் கப்பல்கள் எனப்படும். இந்த வகை கப்பலான `ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’, அணு கதிரியக்க சூழலிலும் தடையின்றி செயல்டும் திறன் கொண்டது.
மும்பை மஸகான் கப்பல் கட்டும் தளத்தில், கடற்படைத் தளபதி ஆர்.கே. தோவண் முன் னிலையில் அவரது மனைவி மினு தவாண் கொல்கத்தா- வகை பி15-பி ரக `ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க்கப்பலின் கடற்பயணத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் எடை சுமார் 3,000 டன்கள். 163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் 7,300 டன் எடையுடன் மணிக்கு 30 நாட்டிக்கல் மைலுக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் அதி நவீன தொழில்நுட்பங்கள், வசதிகள் உள்ளன. அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இக்கப்பல், அணு ஆயுத தாக்குதல், உயிரி ரசாயன தாக்குதலையும் எளிதில் சமாளிக்கும்.
இக்கப்பலில் நிர்மானிக்கப்பட் டுள்ள அமைப்பானது அணு கதிர்வீச்சு, ரசாயன பொருட்களை வடிகட்டிய பிறகே கப்பலுக்குள் வெளிக்காற்றை அனுமதிக்கிறது. இதனால் எந்தவொரு அசாதாரண சூழலிலும் சிக்கலின்றி இயங்கும்.
இக்கப்பலிலிருந்து கடலோரப் பகுதிகள் மற்றும் கடலில் தொலை வில் உள்ள எதிரிகளின் இலக்கை சூப்பர்சானிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்க முடியும்.
அதி நவீன விமான எதிர்ப்பு, போர்க்கப்பல் எதிர்ப்பு தொழில் நுட்பங்களும், பக்கவாட்டில் சுழன்றும் நீண்ட தொலைவில் உள்ள வான் இலக்கை அழிக்கும் திறனும் கொண்டது.
30 மி.மீ. அதிதுரித துப்பாக்கிகள் மிக நெருக்கமான தற்காப்புத் திறனை அளிக்க வல்லவை. மேலும், கடற்போரின் போது எம்ஆர் துப்பாக்கிகள் கூடுதல் பலத்தை அளிக்கும்.
நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புத் திறனும் இக்கப்பலுக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 32 வான் இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல ராடார் தொழில்நுட்பம் மற்றும் பிரமோஸ் ஏவுகணை தாங்கி ஆகியவை இக்கப்பலின் சிறப்பம்சங்களாகும். வரும் 2018-ம் ஆண்டு இக்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும்.
மும்பையிலுள்ள மஸகான் போர்க்கப்பல் கட்டும்தளத்தில் உலகத் தரம்வாய்ந்த போர்க்கப்பல் களை நிர்மாணிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 4 கப்பல்கள் 6 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT