Last Updated : 09 Apr, 2015 08:34 AM

 

Published : 09 Apr 2015 08:34 AM
Last Updated : 09 Apr 2015 08:34 AM

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு பிரதமர் மோடி 9 நாட்கள் சுற்றுப்பயணம்: 400 இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இச்சுற்றுப்பயணத்தில் முக்கிய இடம்வகிக்கின்றன.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலில் பிரான்ஸ் செல்லும் மோடி, அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடன் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தித் துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

பின்னர், பிரெஞ்சு தொழிலதிபர் களுடனான கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பாதுகாப்பு தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிக்கிறார். பிரான்ஸில் நான்கு நாட்கள் தங்கும் மோடி, அதிபர் ஹொலாந்துடன் படகுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரான்ஸிலுள்ள முதலாம் உலகப்போர் நினைவிடத்தில், அப்போரில் உயிரிழந்த 10,000 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின், யுனெஸ்கோ தலைமையகத்துக்கும், பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்துக்கும் செல்கிறார்.

பேச்சுவார்த்தை

பிரான்ஸிலிருந்து மோடி ஜெர்மனி செல்கிறார். அங்கு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த பேச்சுவார்த்தை நடைபெறும். மேக் இன் இந்தியா திட்டத்துக்காக அவர்களின் பங்களிப்பை ஈர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜெர்மனியில் புகழ்பெற்ற ஹன்னோவர் தொழில் கண்காட்சியை நடப்பாண்டு இந்தியா இணைந்து நடத்துகிறது. அதில், 400 இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இப்பகுதிக்குத்தான் மோடி முதலில் செல்கிறார்.

இங்கு இந்திய கண்காட்சிப் பகுதியை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் இணைந்து மோடி தொடங்கி வைக்கிறார். பின், இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் உரையாற்றுகிறார். பின், இந்தியாவில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரயில்வேதுறையை நவீனப்படுத்துவது சார்ந்து, பெர்லின் ரயில்நிலையத்தைப் பார்வையிடுகிறார்.

இறுதியாக கனடா செல்கிறார். கடந்த 42 ஆண்டுகளில் கனடா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சு நடத்துகிறார்.

இவ்வாறு, வெளியுறவுத் துறை செயலர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x