Published : 14 Apr 2015 09:34 AM
Last Updated : 14 Apr 2015 09:34 AM

திருப்பதி என்கவுன்ட்டரில் தப்பிய 2 பேரின் சாட்சியத்தைப் பதிவு செய்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்: பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவு

ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த என்கவுன்ட்டரில் தப்பி வந்த 2 பேரின் சாட்சியத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்தது.

சாட்சியம் அளித்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதியதால், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக காவல்துறை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் ஏராளமானவர்களுக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கின் முக்கியத்துவம் கருதி ஆந்திர மாநில தலைமைச் செயலர் மற்றும் ஆந்திர காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் தரநிலையிலான குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.என்கவுன்ட்டரில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையில் பங்குபெற்ற வனத்துறையினர்கள், காவல்துறையினர் அனைவரது விவரங்களையும் வரும் 22-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

என்கவுன்ட்டர் சம்பவத்தில் பயன்படுத் தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவடையும் வரை காவல்துறை ஆவணம், லாக் புத்தகம், காவல்துறை பொதுக்குறிப்பு (ஜிடி) மற்றும் இதர ஆவணங்கள் அழிக்கப்படவோ, சேதப்படுத்தப்படவோ, நீக்கப்படவோ கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் சாட்சியம் அளிக்க முன்வந்த நிலையில், அவர் டெல்லி செல்ல இயலாததால் அவர் சாட்சியம் அளிக்க முடியவில்லை. அவரிடம் சாட்சியம் பெற அதிகாரி ஒருவரை நியமிக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக நேற்று தன்னைச் சந்தித்த இரு சாட்சிகளிடம் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்ய அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

மறு பிரேத பரிசோதனை கோரிய வழக்கு முடித்துவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டைகிரி பாளையத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தனது கணவரை ஆந்திர போலீஸார் திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்துள்ளனர். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், இந்த சம்பவம் சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு அப்பால் நடந்துள்ளதால், மனுதாரர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து முனியம்மாள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, “இந்த வழக்கில் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடுவதற்கான அம்சங்கள், ஆந்திர உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வருவது தெரிகிறது. எனவே மனுதாரர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகலாம். ஒரு நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் ஒரு நடவடிக்கை இருக்கும்போது, மற்றொரு நீதிமன்றம் அதில் குறுக்கிடுவது ஒழுங்கு மற்றும் தார்மீகம் ஆகாது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x