Published : 26 Apr 2015 11:00 AM
Last Updated : 26 Apr 2015 11:00 AM
கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 125 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து நேபாளத்துக்கு புனித யாத்திரையாக சுமார் 80 பேரும், பனிச்சறுக்கு சாகசம் செய்ய 15 – 20 பேரும் சென்றுள்ளதாக டெல்லியில் உள்ள மகாராஷ்டிர தகவல் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “நேபாளத்தில் எங்கள் மாநிலத்தவரின் பாதுகாப்பு குறித்து உள்ளூரில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. ஆனால் நேபாளம் சென்றவர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை” என்றார்.
இந்நிலையில் ஹைதரா பாத்தில் இருந்து பசுபதிநாதர் கோயிலுக்கு சென்ற 25 பேர் பத்திரமாக இருப்பதாக இவர் களை அழைத்துச் சென்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் கவுரிசங்கர் கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன் ஹோட்டலின் 4-வது மாடியில் இருந்து கீழே ஓடிவந்தேன். என்னுடன் வந்த அனைவரும் காத்மாண்டில் பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள மைதானத்தில் பத்திரமாக இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக எங்கள் ஹோட்டல் சேதம் அடையவில்லை. அருகில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன” என்றார்.
ஹைதராபாத்தில் இருந்து கடந்த 17-ம் தேதி புறப்பட்ட இக்குழுவினர், வாரணாசி சென்ற பிறகு ஹைதராபாத் திரும்ப திட்டமிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT