Published : 02 Apr 2015 03:13 PM
Last Updated : 02 Apr 2015 03:13 PM
*
சமையல் எரிவாயு மானியத்தை தங்கள் ஊழியர்கள் துறக்குமாறு வங்கிகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கிவ் இட் அப்' வசதி படைத்தோர் சிலிண்டர் மானியத்தை கைவிட வலியுறுத்தும் பிரச்சாரத்துக்கான பெயர் இது. இந்தப் பிரச்சாரத்தை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி சமையல் எரிவாயு மானியத்தை தங்கள் ஊழியர்கள் துறக்குமாறு வங்கிகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவர் பேசியதாவது:
சமையல் எரிவாயு மானியத்தை தங்கள் ஊழியர்கள் துறக்குமாறு வங்கிகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் அறிவுறுத்த வேண்டும். இதுவரை 2 லட்சம் வாடிக்கையாளர்கள் தாமாகவே முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை துறந்துள்ளனர். நாடு முழுவதும் 15.3 கோடி சமையல் எரிவாயு சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் வசதி படைத்தோர் இன்னும் பெருமளவில் முன்வந்து மானியத்தை துறக்க வேண்டும். வங்கிகள் இந்தப் பணியில் உதவ வேண்டும்.
ஒவ்வொரு வங்கியும் தனது ஊழியர்களுக்கு காஸ் மானியத்தை துறக்குமாறு அறிவுறுத்த வேண்டும். இதேபோல் பெரும் தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் சிலிண்டர் மானியத்தை கைவிட ஊக்குவிக்க வேண்டும்.
அரசின் இந்த பிரச்சாரத்தின் நோக்கம் மானியத்தை குறைத்து லாபம் சந்திப்பது அல்ல. மாறாக, இன்னமும் விறகு வைத்து சமையல் செய்யும் ஏழை மக்களுக்கு தூய்மையான எரிசக்தி வழங்க முடியும் என்பதற்காகவே. ஒரு கோடி மக்கள் தாமாகவே முன் வந்து மானியத்தை விட்டுக்கொடுத்தால் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் விறகு பயன்பாட்டை கைவிடும்.
இதன் மூலம் காடுகள் அழிக்கப்படுவது குறையும், கார்பன் நச்சு வெளியிடப்படுவது தடுக்கப்படும். அரசு, நேரடி மானியத் திட்டத்தைக் கொண்டு வந்த பிறகு சமையல் எரிவாயு கள்ளச் சந்தையில் விற்கப்படுவது போன்ற முறைகேடுகள் வெகுவாக குறைந்துள்ளன. மேலும், நேரடி மானியத் திட்டத்தால் பயனாளிகளுக்கு மானியம் சரியாகச் சென்றடைகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ரூ.8,000 கோடி சேமித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கை சலுகை பெறும் கணக்கிலிருந்து மானியச் சலுகை மறுப்பு கணக்காக எளிதில் மாற்றிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. www.MyLPG.in. என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கே பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT