Published : 14 Apr 2015 10:45 AM
Last Updated : 14 Apr 2015 10:45 AM

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் மறுபிரகடன விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்: 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் அனுமதித்து மறுபிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவரின் அரசியல் சட்ட வரம்பு அதிகாரம் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் அண்மையில் குடியரசுத் தலைவரால் மறுபிரகடனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தன.

“இந்த அவசரச் சட்ட மறுபிரகடனம் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் உள்ளது. மாநிலங்களவையின் சட்டமியற்றும் நடைமுறைகளை மத்திய அரசு மீறியுள்ளது. மக்களவை இந்த மசோதாவை நிறைவேற்றவில்லை என்ற நிலையில், முறைப்படி சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக அவசர சட்டமாகக் கொண்டுவருவதை எப்படி ஏற்க முடியும். எந்த சூழலில் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை சிறிதளவு கூட இச்சட்டம் நியாயப்படுத்தவில்லை. அவசர சட்ட ராஜ்ஜியம் அனுமதிக்கத்தக்க ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்துள்ளது. அரசியல் சாசனத்தை ஏமாற்றும் செயல் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதுபோன்ற சூழலில் அவசர சட்டம் எவ்வகையில் சாத்தியம்” என அம்மனு கேள்வியெழுப்பியுள்ளது.

இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுபிரகடனம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான நிலைப்பாட்டைத் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3-ம் தேதி குடியரசுத் தலைவரால் மறுபிரகடனம் செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம், சட்டப்படி செல்லுபடியாகுமா என மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு அவசர சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டிருந்தால் அதுசார்ந்து குடியரசுத் தலைவரின் அரசியல் அதிகார வரம்பை ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேசமயம் வரவுள்ள மாநிலங்களைவைக் கூட்டத்தில் இம்மசோதா பிரச்சினைகளின்றி நிறைவேறவும் வாய்ப்புள்ளது. எனவே, “தற்போதைய இம்மனு பயனளிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது” என நீதிபதிகள் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் தெரிவித்தனர்.

மேலும் உடனடி விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அப்போது, “அரசின் விளக்கத்தைப் படித்த பிறகு, மனுதாரரின் கருத்தை ஏற்காமல் போகவும் வாய்ப்புள்ளது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத போது பிறப்பிக்கப்படும் அவசர சட்டம் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் கூட்டத்தொடர் நடக்கும் சமயத்தில் 6 வாரங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x