Last Updated : 19 Apr, 2015 08:08 PM

 

Published : 19 Apr 2015 08:08 PM
Last Updated : 19 Apr 2015 08:08 PM

விவசாயிகளுக்கு எதிரானது மோடி அரசு: நிலச் சட்டத்துக்கு எதிரான பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ராகுல் பேசியதாவது:

விவசாயிகள் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அதைத் தடுக்க முதல் ஆளாக நான் களத்தில் நிற்பேன். மக்களவைத் தேர்தலின்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மோடி அரசு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டு வருகிறது.

தேர்தலின்போது மோடி தொழிலதிபர்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனாக வாங்கினார். அதை இப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும். எனவே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அதற்கு பலிகடா விவசாயிகள்தான்.

குஜராத் மாதிரி ஆட்சி நிர்வாக முறை மூலமாக விவசாயிகளின் நிலத்தை எளிதாக பறிக்கமுடியும் என்பதை நிரூபித்த மோடி இப்போது நாடு முழுவதும் அதை செய்ய முடியும் என தொழிலதிபர்களுக்கு உறுதி கொடுத்துள்ளார். அடித்தளம் பலவீனமாகி கட்டிடம் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் அதன் மீது ஏணி சாத்தி வெள்ளை பூசி கட்டிடம் பளபளக்கிறது என்று காட்டுவதுதான் குஜராத் மாதிரி வளர்ச்சி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

சோனியா காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

காலம் தவறிய மழையால் பயிர், விளைச்சலை இழந்து வேதனையடைந்துள்ள விவசாயிகளை மோடி அரசு மேலும் நோகடிக்கிறது. விவசாயிகளை நோஞ்சான் ஆக்கி தொழிலதிபர்களை கொழுக்க வைக்கும் மோடி அரசின் முயற்சிகளை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. விவசாயிகளை நிலைகுலைய வைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். விவசாயிகள் நலன் பறிபோக அனுமதிக்கமாட்டோம்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சிறிதளவு உயர்த்திவிட்டு விவசாயிகளை அதோடு பாஜக அரசு கைவிட்டுவிட்டது. அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகம். பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மிக மிக அதிகம். ஆனால் அவர்களுக்கு பாஜக அறிவித்த இழப்பீடு மிகவும் குறைவு.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு நிதி உதவியை குறைத்து அரசு முடக்கப் பார்க்கிறது. நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் தாம் செய்துள்ள மாற்றங்களை சரிதான் என்று சொல்லி நியாயப்படுத்துகிறது மோடி அரசு. இந்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் உங்களின் நன்மைக்கு என விவசாயிகளிடம் பொய்த் தகவலை தருகிறது. உண்மையில் பார்த்தால், விவசாயிகள் நலனைக் காக்கக்கூடிய அம்சங்கள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தொழிலதிபர்களும் கட்டுமான முதலாளிகளுமே லாபம் அடையப் போகிறார்கள். எல்லோரையும் சேர்த்துக்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லப்போகிறேன் என்று மோடி சொன்னார். ஆனால் இப்போது அவரது அரசு கொண்டுவந்துள்ள சட்டம் விவசாயிகளையும் பழங்குடிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதுதான் இந்த ஆட்சியின் உண்மையான நோக்கம். அவர்களின் மனப்பாங்கு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் எதிரானதாக இருக்கிறது. இவ்வாறு சோனியா கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது, கடந்த காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்தது. ஆனால் தற்போதைய அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி அரசு காப்பாற்றவில்லை என்று தெரிவித்தார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x