Published : 21 Apr 2015 07:14 AM
Last Updated : 21 Apr 2015 07:14 AM
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு நடுவே, சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் நகல் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பின. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர் அமளி காரணமாக மக்களவை பல முறை ஒத்திவைக்கப் பட்டது.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று காலை தொடங்கியது. அப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த 3-ம் தேதி குடியரசுத் தலைவரால் மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் நகலை நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய நிலம் கையக அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுதொடர்பாக மீண்டும் அவசர சட்டம் பிறப்பித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என்றும் விமர்சனம் செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் அப்போது அவையில் இருந்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை பிற்பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியதும் இதே நிலை நீடித்தது.
மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையிலும், நிலம் கையக சட்டத்தை மத்திய அரசு பின்வாசல் வழியாக கொண்டுவந்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பந்தோபாத்யாய கூறும்போது, “நிலம் கையக அவசர சட்டத்தை எங்கள் கட்சியும் எதிர்க்கிறது” என்றார்.
இதையடுத்து ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது, “எந்த ஒரு அவசர சட்டம் பிறப்பித்தாலும், அவை கூடியதும் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படிதான் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை சட்டமாக மாற்றுவது தொடர்பான மசோதா கொண்டுவரும்போது உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்” என்றார்.
இதே கருத்தை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் தெரிவித்தார். எனினும், இதை பொருட்படுத்தாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை பிற்பகல் 2 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை சட்டமாக மாற்றுவது தொடர்பான மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் பட்டது. இது மக்களவையில் நிறை வேறியபோதும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதுமான பலம் இல்லாததால் நிறைவேறவில்லை.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதியுடன் இந்த அவசர சட்டம் காலாவதி ஆக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதில், கடந்த மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் 9 திருத்தங்கள் சேர்க்கப்பட் டுள்ளன.
இது நரேந்திர மோடி தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 10 மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட 11-வது அவசர சட்டமாகும். இந்த கூட்டத்தொடரில் எப்படியாவது இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT