Published : 25 Apr 2015 07:50 AM
Last Updated : 25 Apr 2015 07:50 AM
கர்நாடகாவில் பல்வேறு இடங் களில் பெய்த கன மழைக்கு ஒரே நாளில் 13 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூரு வில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியதால் நகரம் ஸ்தம்பித்தது.
கர்நாடகாவில் மார்ச் மாதத்தில் இருந்து கோடை வெயில் சுட்டெரிக் கும் நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. வட கர்நாடகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.
பெங்களூருவில் பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே ஆலங்கட்டி மழை பெய்ததால் சாலைகளிலும் வீட்டு கூரைகளிலும் சிறிய அளவிலான ஐஸ் கட்டிகள் விழுந்தன. இதனை சிறுவர்களும் பெரியவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
பெங்களூருவில் பெய்த கன மழையால் சாந்திநகர், சிவாஜிநகர், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது. முக்கிய இடங்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் இன்னும் 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் எனவும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
13 பேர் பலி
கர்நாடகாவில் நேற்றுமுன் தினம் இரவு பெய்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சுவர் இடிந்து விழுந்தும் இடி தாக்கியும் 50-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளன. ஹாவேரி, சிவமொக்கா, துமகூரு, பீஜாப்பூர், ஹாசன், கார்வார் உள்ளிட்ட மாவட் டங்களில் 100-க்கும் மேற்பட்டோ ரின் வீடுகள் இடிந்துள்ளன.
கனமழையின் போது ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த ராஜப்பா (வயது 60), சந்திரா(28), பீஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிதரகவுடா பாட்டீல் (60), அருண் பாட்டீல்(12) குல்பர்கா மாவட்டத்தை சேர்ந்த அனிதா (31), கார்வார் மாவட்டத்தை சேர்ந்த ஹூசேன் (65), அனிதா மாருதி (24), துமகூருவை சேர்ந்த னிவாசன் (40) ஆகியோர் மின்னல் பாய்ந்து உயிரிழந்தனர்.
இதே போல சிவமொக்காவில் பங்காரம்மா (65) மீது மரம் விழுந்தும், ஹாசனில் சந்தியா (25), சிருஷ்டி(14) ஆகியோர் மீது சுவர் விழுந்தும் பலியாகினர். பெங்களூருவில் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் கீதா (51) சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்து உயிரிழந்தார். ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT