Published : 15 Apr 2015 03:18 PM
Last Updated : 15 Apr 2015 03:18 PM
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்வது அவசியமே என சிவசேனா கட்சி தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்து மகா சபா தலைவர் சாத்வி தேவா தாகூர், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார். அவரது கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்தால் மட்டுமே வாக்குவங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற சர்ச்சைக் கருத்தை தெரிவித்த சிவசேனா அவ்விவகாரம் எழுப்பிய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு சர்ச்சைக் கருத்தை சிவசேனா தெரிவித்துள்ளது.
சிவ சேனாவின் சாம்னா பத்திரிகையில், "முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்வது அவசியமே.
தங்கள் சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிப்பதன் மூலம் இந்திய தேசத்தை பாகிஸ்தானாக மாற்றலாம் என முஸ்லிம்கள் யோசிக்கின்றனர். ஆனால், அது தனது சொந்த குடும்பத்துக்கு எவ்வளவு கேடு என்பதை அவர்கள் உணரவில்லை. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் நபரால் அவரது குழந்தைகளுக்கு தரமான வாழ்க்கை அளிக்க முடியாது.
இவ்விவகாரத்தில், இந்து மகாசபை தலைவர் சாத்வி தேவா தாகூர் கூறிய கருத்து சரியானதான். ஆனால், அவர் பயன்படுத்திய வார்த்தையை மாற்றியிருக்க வேண்டும் கட்டாய கருத்தடை எனக் கூறியதற்குப் பதிலாக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை என கூறியிருக்க வேண்டும்.
சாத்வி படிப்பில் சற்று பின் தங்கியவரே எனவே அவரது வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் சொன்ன பிரச்சினையின் ஆழத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது அவசியமே.
இதை நாங்கள் கூறுவதற்கு முஸ்லிம்கள் தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமே காரணம். குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால், குழந்தைகளுக்கு தரமான சிறந்த கல்வி வழங்க முடியும், வாழ்வின் நிலைமையை உயர்த்தி அமைத்துக் கொள்ள முடியும்.
எனவே, ஏ.ஐ.எம்.ஐ.எம். அமைப்பின் தலைவர் ஓவாய்ஸி போன்றவர்கள் முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கும், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யவும் முன் வர வேண்டும்" இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT