Published : 14 Apr 2015 12:03 PM
Last Updated : 14 Apr 2015 12:03 PM

ரூ. 2 கோடி செம்மரம் பறிமுதல்: தமிழக தொழிலாளர்கள் 63 பேர் ஆந்திராவில் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான செம்மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சேஷாசலம் வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அங்கிருந்து தப்பியவர்களாக இருக்கலாம் என ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் ஆந்திர சிறப்பு அதிரடி போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரைத் தவிர மற்றவர்கள் தப்பிவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவ்வாறு தப்பியவர்களைப் பிடிக்க தீவிர சோதனை நடந்து வருகிறது.

இதில், ஆத்மகூர் போலீஸார் மற்றும் வனத்துறையினர் அனந்த சாகரம் மண்டலம், சாவுராள்ள பல்லி எனும் இடத்தில் விழுப்புரம், தி.மலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 63 கூலித் தொழிலாளர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரி மற்றும் ரூ. 2 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

என்கவுன்ட்டரில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் 63 பேர் கைது செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x