Published : 11 Apr 2015 08:49 AM
Last Updated : 11 Apr 2015 08:49 AM

பிஹார் தேர்வு முறைகேடு: மத்திய அமைச்சர் கிண்டல்

“பிஹாரில் தேர்வுக் காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வாக இருக்க முடிகிறது. தேர்வுக்கு துண்டுச் சீட்டு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் மக்கள் மும்முரமாகி விடுகின்றனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு அவர்கள் எங்களை வற்புறுத்துவதில்லை” என்று மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

பிஹாரில் கடந்த மாதம் நடைபெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் துண்டுச்சீட்டு (பிட்) வழங்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்தவரான மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது, “பிஹாரில் மெட்ரிகுலேஷன் தேர்வு நடக்கும்போது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு எனக்கு வரும் அழைப்புகள் குறைந்து விடுகின்றன. தேர்வுக் காலத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் தேர்வுக்கு தயாராகிறது.

தேர்வின்போது துண்டுச்சீட்டு தயாரிப்பது, அவற்றை ஜன்னல் வழியாக மாணவனிடம் சேர்ப்பது என குடும்ப உறுப்பினர்கள் பிஸியாகி விடுகின்றனர். தேர்வுக் காலத்தில் எங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளுக்கான அழைப்பு குறைந்துவிடுகிறது. இதனால் அரசியல்வாதிகள் ஓய்வாக இருக்க முடிகிறது” என்றார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஆற்றல் வாய்ந்த தொழிலாளர்களின் தேவை என்னவாக இருக்கும் என்பது குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் அமைச்சர் ரூடி இதனை கூறினார்.

இந்தியாவுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஆற்றல் வாய்ந்த தொழிலாளர்கள் 11 கோடி பேர் தேவை என்றும் கட்டுமானத்துறை, ஆட்டோமொபைல், ஜுவல்லரி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ரூடி கூறும்போது, “அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மட்டுமே மதிப்பிடப்படாது. அவருடைய தனித் திறமை என்னவென்று மதிப்பிடப்படும். விமானிக்கான லைசென்ஸ் பெற்றவுடன் நான் விமானம் ஓட்டமுடியும். என்றாலும் வானிலை அறிக்கைகளை படிப்பது, விமானப் போக்குவரத்துக்கான தகவல் தொடர்பு அறிவை பெறுவது என பிற திறன்களையும் நான் பெற்றாகவேண்டும்” என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x