Published : 25 Apr 2015 09:14 AM
Last Updated : 25 Apr 2015 09:14 AM
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாடல் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் போலீஸார் ஆவர். அந்தப் பெண்ணிடம் இருந்து அவர்கள் பணம் பறித்தார்களா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து குறுஞ்செய்தி வழியாகப் புகார் ஒன்றை கடந்த 21ம் தேதி மும்பை போலீஸ் ஆணையர் ராகேஷ் மரியாவுக்கு அனுப்பினார்.
அதில் கடந்த 13ம் தேதி மூன்று போலீஸார் தன்னை சகினாகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை சட்டத்துக்குப் புறம்பாக சிறை வைத்திருந்ததாகவும், மற்றும் தன்னிடமிருந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தைப் பறித்துக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
அந்தக் குறுஞ்செய்தியைப் படித்த பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து மரியா விசாரணை நடத்தினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் உதவி இன்ஸ்பெக்டர்களாகவும், ஒருவர் தலைமை கான்ஸ்டபிளாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மீது 376 (பாலியல் வன்கொடுமை), 354 (a) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 384 (வழிப்பறி) மற்றும் தொடர்புடைய இதர சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணிடம் இருந்து அந்த மூன்று போலீஸார் பறித்துக் கொண்ட பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT