Published : 22 Apr 2015 08:33 AM
Last Updated : 22 Apr 2015 08:33 AM
மக்களவையில் நேற்று எம்.பி.க்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
ரூ.10,100 கோடி நிவாரண கோரிக்கை
வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்:
கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மத்திய அரசை மாநில அரசுகள் அணுகியுள்ளன.
சில அரசுகளை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கேட்டுக்கொண்டுள்ளோம். கூடுதல் தேவைக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியைப் பெறலாம்.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்கள் முறையே ரூ.744.48 கோடி, ரூ.8,522 கோடி, ரூ.1,135.91 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன.
மழையால் ஏற்பட்ட சேதத்தால் கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை மகாராஷ்டிரத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத இழப்பீட்டை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனுமதி வாங்காத பாக். நிறுவனம்
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் டெல்லியில் 6 அடுக்குமாடி மனைகளை தனது பெயரில் வாங்கியுள்ளது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.
அதேசமயம் அந்நிறுவனம் டெல்லியில் நிலம் எதுவும் வாங்கவில்லை. இது புதுடெல்லி மாநகராட்சி ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
310 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள்
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
2014-ம் ஆண்டு நாடு முழுவதும் 310 ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 186 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லியில் 27, மத்தியப் பிரதேசத்தில் 52, குஜராத்தில் 11, ஹரியாணாவில் 7, மகாராஷ்டிரத்தில் 6, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசத்தில் தலா 4, பிஹார், ஒடிஸாவில் தலா 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இத்தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிட் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் இழப்பீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற நெறிமுறைகள் குறித்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.19,377 கோடி பாக்கி
உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்:
நாடு முழுவதும் 18 மாநிலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.19,377 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இதில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ரூ.9,715.69 கோடி வழங்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிர கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2,402. 39 கோடி, தமிழக விவசாயிகளுக்கு ரூ.842.46 கோடி, பஞ்சாப் விவசாயிகளுக்கு ரூ.682.28 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை நேரடியாக வழங்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை. 2013-14-ம் ஆண்டு கரும்பு சாகுபடி காலத்தில் இந்த நிலுவைத் தொகை 18,648 கோடியாக இருந்தது.
விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு
விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால்:
மாநில அரசுகளுடன் இணைந்து, கூடுதல் விளையாட்டு வசதிகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே இருக்கும் உள்கட்டமைப்புகளையும் சிறந்த முறையில் பராமரிக்க முயன்று வருகிறோம். விளையாட்டுத் திறனை வளர்க்க, ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கிராமங்களில் விளையாட்டு வசதிகளை உருவாக்க உதவும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், குறைந்தது 10 சதவீத நிதியை விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்களுக்காக மேலும் சில உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.
164 முறை அத்துமீறிய பாக்.
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:
நடப்பு ஆண்டில் இதுவரை ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எள்லையில் 164 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களால் 2 குடிமக்களும், ஒரு வீரரும் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் எல்லையோரப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 16 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT