Published : 17 Apr 2015 09:15 PM
Last Updated : 17 Apr 2015 09:15 PM
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முந்தைய அரசுகள் பற்றி தாக்கிப்பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானது அல்ல என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது முந்தைய அரசாங்கங்கள் நாடடில் குழப்ப நிலையை ஏற்படுத்தின என்று விமர்சித்துள்ளார். இது ஏற்கத்தக்க கருத்தல்ல. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர் நாட்டை பிரதிபலித்து பேச வேண்டும். ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக பிரச்சாரகராக நடக்கக்கூடாது. மோடி பேசுவது அவரது நொடிந்துபோன மனோநிலையைக் காட்டுவதாக உள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களின்போது சொந்த நாட்டு அரசியலை பேசி பாரம்பரிய நெறிகளை அவர் உடைத்துள்ளார். முந்தைய அரசுகளை குறை கூறி பேசியுள்ளார். இது போன்ற பேச்சுகளை காங்கிரஸ் இனியும் தாங்கிக்கொள்ளாது. அடுத்த முறை பிரதமர் வெளிநாடு செல்லும்போது இதுபோன்று விமர்சித்துப் பேசினால் அங்குள்ள காங்கிரஸ் பிரதிநிதி அப்போதே அதற்கு பதில் கொடுப்பார்.
மரபுகளை நாங்கள் மீறியதில்லை. வெளிநாடு செல்லும்போது அங்கு அவர் நாட்டின் பிரதிநிதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT