Published : 07 Apr 2015 09:40 AM
Last Updated : 07 Apr 2015 09:40 AM
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், நீதித் துறையால் மட்டுமே இவற்றுக்கு விரைவாக தீர்வு காண முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தத்து பேசியதாவது:
நாடு முழுவதும் நீதிமன்றங் களில் கோடிக்கணக்கான வழக்கு கள் தேங்கிக் கிடப்பதாக ஊடகங் களில் செய்திகள் வெளியாகி வருவது அனைவரின் கவனத்தை யும் ஈர்த்துள்ளது. வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால்தான் அதில் உள்ள சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும். இதில் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளும் பல்வேறு தரப்பினரும் போதிய ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
உதாரணமாக, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண நீதித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுபோல, போலீஸ் நிர்வாகம், விசாரணை அமைப்புகள், சிறை மற்றும் சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இவை அனைத்துக்கும் மேலாக, நீதித் துறை, போலீஸ், விசாரணை அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு போதுமான அளவில் முதலீடு செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாநாடு குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற, சிவில் வழக்குகள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடித்து வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதித் துறை சிறப்பாக செயல்பட நிதி சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துவதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT