Published : 24 Apr 2015 02:58 PM
Last Updated : 24 Apr 2015 02:58 PM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 16 கி.மீ. தூரம் பாத யாத்திரையாக சென்று கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில். கடந்த 2013-ல் உத்தராகண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடும் மழை, நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் கேதார் கோயில் உட்பட பல கோயில்கள் சேதம் அடைந்தன. அதன் பிறகு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலை யில், கேதார்நாத் கோயில் கதவுகள் நேற்று திறக்கப்பட்டு, அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
கேதார்நாத் கோயிலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். 16 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக வந்த ராகுல், சுவாமி தரிசனம் முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2013-ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது, இங்கு நான் வந்தேன். அப்போது இந்த இடம் உருக்குலைந்து இருந்தது. அதன்பிறகு அதிகாரிகளை பலரும் குறை கூறினர். ஆனால், இப்போது கேதார்நாத் கோயிலுக்கு வரும் வழிகளை சிறப்பாக சீரமைத்துள்ளனர்.
வழக்கமாக நான் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் எதுவும் வேண்டிக்கொள்வதில்லை. அதுபோல்தான் கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்த போதும், எதையும் வேண்டவில்லை. ஆனால், கோயிலுக்குள் நுழைந்ததும் தீயைப் போன்ற சக்தியை உணர்ந்தேன்.
இந்தக் கோயிலுக்கு நான் ஹெலிகாப்டரில் வந்திருக்கலாம். ஆனால், நடைப்பயணமாக வந்ததற்கு 2 நோக்கங்கள் உள்ளன. முதலாவது, வெள்ளப் பெருக்கால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பினேன். ஹெலிகாப்டரில் வந்தால், அது அவர்களை அவமதித்தது போலாகி விடும். எனவே, மற்ற யாத்ரீகர்களைப் போல் நானும் நடந்து வர விரும்பினேன்.
இரண்டாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக் கும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். ஆட்களையும் பொருட்களையும் எடுத்து வரும் சுமை தூக்கிகள் பலர் இங்கு வேலை செய்கின்றனர். அவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். யாத்ரீகர்களும் சுற்றலாப் பயணிகளும் இன்னும் அச்சத்தில் உள்ளனர். இந்தச் சூழ் நிலையில் நான் பாதயாத்திரையாக வந்தால், அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்.
கேதார்நாத் கோயில், செல்லும் வழி எல்லாம் பாதுகாப்பாக உள்ளது என்பதை அவர்கள் உணர்வார்கள். அதற்காகத்தான் நான் நடந்து வந்தேன்.
இந்தப் பகுதியைச் சீரமைக்க அதிகாரிகள், போலீஸார், ராணுவம், தொழிலாளிகள் என பல தரப்பினரும் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளனர். இப்போது சாலைகள் சிறப்பாக உள்ளன. ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. இதை ஊடகங்கள் பெரி தாக வெளியிடவில்லை. ஆனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது மட்டும் குறை கூறி ஊடகங்கள் செய்திகளை பெரிதாக்கின.
வெள்ளப் பெருக்கு அனுபவத்துக்குப் பிறகு, கேதார்நாத் பகுதியில் கூடுதலாக பல ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை (ஹெலிபேட்) கட்டுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருடைய யோசனை பாராட்டத்தக்கது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றி ஹெலிபேட்களை அதிகரிக்கலாம். அதன்மூலம் இயற்கை சீற்றங்களின் போது, மக்களை உடனுக்குடன் அங்கிருந்து காப்பாற்ற முடியும். கூடுதல் ஹெலிபேட்கள் வசதி மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக ராகுல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று முன்தினம் 10 கி.மீ. தூரம் நடந்து வந்து லின்சோலி பகுதியில் இரவு தங்கினர். நேற்று காலை மீண்டும் 6 கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலை வந்தடைந்தனர்.
முன்னதாக கேதார்நாத் சுவாமி சிலை குளிர்காலத்தில் உகிமத் என்ற இடத்தில் உள்ள ஓம்கரீஷ்வர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்படும். அதன்படி அங்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலை, நேற்று முன்தினம் கேதார்நாத் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT