Published : 03 Apr 2015 09:19 AM
Last Updated : 03 Apr 2015 09:19 AM
பிஹாரில் உள்ள இரண்டு மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் மணப்பெண் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருமணமாகாமல் இருந்தனர். பல ஆண்டுகளாக காத்திருந்தபோதும் அரசு சாலை வசதி செய்து தராததால், அவர்கள் தாங்களாகவே சாலை அமைத்துள்ளனர்.
தலைநகர் பாட்னாவிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது பர்வான் கலன் மற்றும் பர்வான் குர்த் கிராமங்கள். உத்தரப்பிரதேச மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மலை கிராமங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், பாசனம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
இந்த கிராமங்களில் வசிக்கும் கார்வார் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் அருகில் உள்ள நகரத்துக்குச் செல்வதாக இருந்தால் இரண்டு மலைகள் மீது ஏறி, கரடுமுரடான வனப்பகுதியைக் கடந்து சுமார் 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில் சாலை வசதி செய்துதரக் கோரி பிஹார் அரசுக்கு பல தடவை கோரிக்கை வைத்தும் இவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மணப்பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. பிஹாரில் உள்ள எந்த கிராமத்திலும் இல்லாத வகையில், இந்த கிராமங்களில் 130 பேர் திருமணமாகாமல் உள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமங் களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி இரண்டு மலைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டு சாலை அமைத்துள்ளனர். இதற்காக அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த சாலை கடந்த வாரம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதை இரு கிராம மக்களும் கொண்டாடினர்.
இதுகுறித்து பர்வான் கலன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ் கார்வார் (26) கூறும்போது, “நாங்கள் அமைத்துள்ள சாலை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மணப்பெண் வீட்டார் வர முடியும்” என்றார்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறும்போது, “வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதி யில் கட்டுமானப் பணிகளையோ பொருளாதார நடவடிக்கை களையோ மேற்கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது. கார்வார் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலும் வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பதால் அவர்களுக்கு சாலை அமைத்துக் கொடுக்க முடியவில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT