Last Updated : 25 Apr, 2015 06:03 PM

 

Published : 25 Apr 2015 06:03 PM
Last Updated : 25 Apr 2015 06:03 PM

நிலச் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஆதாயமே: பிரகாஷ் ஜவடேகர்

நிலச் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஆதாயமே. அவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடை அவர்கள் பெறுவார்கள் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "நிலச் சட்டத்தால் விவசாயிகளுக்கு ஆதாயமே. அவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடை அவர்கள் பெறுவார்கள். நிலத்தின் சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகமான விலை விவசாயிகளுக்கு வழங்கப்படும். அத்தோடு 20 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலப்பகுதியும் கூடுதலாக வழங்கப்படும். நிலம் கையகப்படுத்துதல் மூலம் கிராமங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பலரது நன்மையை கருத்தில் கொண்டு விவசாயிகள் சில தியாகங்களைச் செய்யவே வேண்டும்.

நில மசோதா குறித்து நாடு முழுவதும் பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றன. இருப்பினும், நிலச் சட்டம் வழங்கச் சொல்லும் இழப்பீடே விவசாயிகளுக்குப் போதுமானது.

1960-களில் மகாராஷ்டிராவில் நடந்த விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு, 12.5 சதவீத வளர்ச்சியடைந்த நிலப்பகுதியை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஏக்கர் நிலத்துக்கும், மாதம் 2,000 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும். இதனால் விவசாயிகள் போதிய அளவு இழப்பீட்டைத் திரும்பப் பெறுவார்கள்.

எந்தவொரு விஷயத்துக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கும். ஒரு அணை கட்டப்படுகிறதென்றால் அதற்கான நிலத்தைக் கொடுக்கும் 100 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அந்த 100 பேரின் தியாகத்தால் 10,000 பேர் பலன் பெறுவார்கள். எனவே இது குறித்து அதிகம் யோசிக்கத் தேவையில்லை" என்று கூறினார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நில மசோதா, போதிய ஆதரவு இல்லாததால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x