Published : 01 Apr 2015 03:14 PM
Last Updated : 01 Apr 2015 03:14 PM

காதலை ஏற்க மறுத்ததால் விபரீதம்: பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக்கொலை - மற்றொரு மாணவி காயம்; கொலையாளி கைது

பெங்களூருவில் உள்ள பிரகதி உறைவிடப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றிய ஊழியர் சுட்டு கொன்றார். ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததே கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பெங்களூரு ஒயிட் பீல்டை அடுத்துள்ள காடுகோடி என்ற இடத்தில் பிரகதி உறைவிடப் பள்ளி இயங்கி வருகிற‌து. இங்கு துமகூருவை சேர்ந்த கவுதமி (17) 12-ம் வகுப்பு படித்து வந்தார். அறிவியல் பிரிவு மாணவியான கவுதமி தேர்வு முடிந்து, கோடை விடுமுறையில் நுழைவுத் தேர்வுக் கான தயாரிப்பில் ஈடு பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் கவுதமி விடுதியில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். இரவு 10.02 மணிக்கு பள்ளி ஊழியர் மகேஷ் (41) அங்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் மகேஷ் விடுதிக்குள் நுழைந்ததற்கு கவுதமியும், சக மாணவிகளும் ஆட்சேபம் தெரிவித் துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கவுதமியை 3 முறை சுட்டுள்ளார். இதில் கவுதமியின் வாய், நெற்றி ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். அப்போது சத்தம் போட்ட கவுதமியின் தோழி ஷாவையும் மகேஷ் சுட்டதில், அவரது இடது காதில் குண்டு பாய்ந்த‌து.

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஷா அருகிலுள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஷா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி கைது

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உடனே மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மகேஷைப் பிடிக்க பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் ரோஹினி 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனிடையே நாராயணபுராவில் ஒளிந்திருந்த மகேஷை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெற்றோர் போராட்டம்

இந்நிலையில் மாணவி கொலையைக் கண்டித்து பெற்றோரும் பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு மாநகர‌ காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி ஆகியோர் சம்பவ இடத் துக்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்.

ஒருதலை காதல் காரணம்

இந்த சம்பவம் குறித்து தனிப் படைப் போலீஸார் கூறும்போது, ‘‘பள்ளியில் மாணவிகள் செல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் ஊழியர்களின் செல்போன் மூலம் மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசு வார்கள். அவ்வாறு மகேஷின் செல்போனுக்கு ஊரில் இருக்கும் கவுதமியின் பெற்றோர் அழைப் பார்கள். அப்போது மகேஷ் செல் போனை கவுதமியிடம் வழங்கி, பேச வைப்பார். நாளடைவில் மகேஷ் கவுதமியை ஒரு தலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். அவரது காதலை கவுதமி ஏற்க மறுத்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாணவிகளின் விடுதி அறையில் அனுமதியின்றி மகேஷ் நுழைந்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த போது, அவரை எச்சரித்துள்ளனர். இருப்பினும் மகேஷ் தொடர்ந்து கவுதமிக்கு தொல்லைக் கொடுத்து வந்துள் ளார். ஆனால் இது தொடர்பாக கவுதமி பள்ளி நிர்வாகத்திலும், பெற்றோரிடமும் புகார் அளிக்க வில்லை எனத் தெரிகிறது.

கவுதமி விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றால் மீண்டும் சந்திப்பது கஷ்டம் என்பதை அறிந்த மகேஷ் நேற்று முன் தினம் இரவு மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். அதன் தொடர்ச்சி யாகவே துப்பாக்கி சூடு நடந் துள்ளது” எனத் தெரிவித்தனர்.

கவுதமியின் தந்தை ரமேஷிடம் பேசிய போது, “அந்த பாவியை (மகேஷ்) எனக்கு நல்லா தெரியும். ஸ்கூல்ல செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு சொன்னதால அவருக்குத் தான் அடிக்கடி போன் பண்ணுவோம். கவுதமியை பார்க்க வரும்போதெல்லாம் ரொம்ப அப் பாவியாக பேசுவார்.

என் மகளை அவன் சுட்டுக் கொல்றதுக்கு சில மணி நேரம் முன்னால், சாயங்காலம் சுமார் 7.30 மணிக்கு ஃபோன் பண்ணினேன். அப்போது கூட என் மகள் இப்படி ஒரு தொந்தரவோ மிரட்டலோ அவளுக்கு இருக்குனு ஒரு வார்த்தை சொல்லலையே...

‘நாளைக்கு ஊருக்கு தனியாக வர்றேன். நீங்க வர வேணாம்ப்பா' இதுதான் கடைசியாக கவுதமி என்கிட்ட சொன்னாள். திடீர்ன்னு 10.30 மணிக்கு விடுதியிலே இருந்து, ‘உங்க பொண்ணுக்கு உடம்புக்கு முடியல. உடனே வாங்க'ன்னு போன் பண்ணாங்க'. வந்து பார்த்தா என் மகள் ரத்தம் தோஞ்சி செத்துக் கிடக்கிறாள்.

அந்த கோலத்தை பார்த்து மயங்கி விழுந்த என்னோட மனைவிக்கு இன்னும் நினைவு திரும்பலை. என் மகளுக்கு நல்லா படிச்சி டாக்டர் ஆகணும்கிறதுதான் நீண்ட நாள் கனவு. லீவுல கூட இங்கேயே தங்கி நுழைவுத் தேர்வுக்காக படிச்சிட்டு இருந்தாள். இப்போ அவளோட டாக்டர் கனவு கரைஞ்சி போச்சே''எனக் கதறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x